தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு ஆதார் அவசியம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

DIN

எம்.பி.பி.எஸ். சேர்க்கையின்போது முறைகேடுகளைத் தடுக்க ஆதார் அட்டையைக் காண்பித்து, நகலை கட்டாயம் சமர்ப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி விக்னயா உள்ளிட்ட 7 பேர் கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையின்போது தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் போலியான இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து இடங்களைப் பெற்றுள்ளனர். 
இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழக மாணவர்களுக்கே தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும். தரவரிசைப் பட்டியலையும் ரத்து செய்து புதிதாக வெளியிட வேண்டும் எனக் கோரியிருந்தனர். 
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற்றுள்ள மாணவர்கள், பிற மாநிலங்களிலும் மருத்துவ சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனரா என்பது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
கால அவகாசம்: இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் சக்திவேல் ஆஜரானார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளவர்கள், பிற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளனரா என்பது குறித்து கண்டறிவது கடினமானது. ஆனால், அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்டவற்றில் விண்ணப்பித்துள்ளார்களா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என்றார். 
ஆதார் அவசியம்: இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த ஆண்டு பலர் போலியான இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து தமிழகத்தில் மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டும் அதுபோன்ற முறைகேடு நடைபெறாமல் இருக்க, மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது ஆதார் அட்டையை அவசியம் காண்பித்து, அதன் நகலைச் சமர்ப்பிக்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். 
மேலும், இது தொடர்பாக நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT