தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு மாதமாகியும் காக்கி உடை மீது மாறாத அச்சம்

DIN


தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆகிய நிலையிலும், மக்களுக்கு காக்கிச் சட்டைகள் மீதான கலக்கமும், அச்சமும் இன்னும் மறையவில்லை.

கடந்த மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் தூத்துக்குடி கிராம மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தவர்களும், துப்பாக்கிச் சூட்டினால் உறவினர்களை இழந்தவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

அதனால் ஏற்பட்ட அச்சம் ஒரு மாத காலமாகியும் மக்களின் மனங்களில் இருந்து மாறவில்லை. காக்கிச் சட்டை அணிந்து வரும் காவலர்களைப் பார்த்த உடனே கலங்கி நிற்கிறார்கள் கிராம மக்கள். 

இது குறித்து குமாரரெட்டியார்புரம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 99 நாட்கள் சுமூகமாகவே சென்றது. பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிந்த காவல்துறையினருக்குத் தேவையான உதவிகளை கிராம மக்களே செய்தோம். திறந்தவெளியில் போராடிய நாங்கள் எங்களுக்காக உணவு சமைத்தபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் சேர்த்தே சமைத்து உணவளித்தோம்.

நாங்கள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அதே காவல்துறை எந்த தயக்கமும் இல்லாமல் எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். மக்களை கொல்வார்கள் என்று. இப்போதும் எங்கள் ஊர் மக்களை பயங்கரவாதிகளைப் போல பார்க்கிறார்கள். நள்ளிரவில் வீடு புகுந்து விசாரணை என்ற பெயரில் இளைஞர்களை அழைத்துச் செல்கிறார்கள் என்கிறார் கலங்கிய கண்களோடு.

அதே கிராமத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண்மணி கூறுகையில், எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் பால்ராஜ். 55 வயதாகும் அவர் ஆட்டோ ஓட்டுகிறார். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது இரண்டு கால்களும் பலத்த காயமடைந்தன. எனினும் காவல்துறையினர் விசாரணைக்காக அவரை தரதரவென இழுத்துச் சென்றனர் என்கிறார்.

13 நாட்களுக்கு முன்பு பால்ராஜைப் பார்த்தோம். அதன் பிறகு அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. போராட்டத்தின் போது கைதாகி விடுவிக்கப்பட்டவர்கள் பலரும் இன்னும் வீடு திரும்பவில்லை என்கிறார்கள்.

மக்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பலரும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறோம். இனி அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்தவே அச்சமாக இருக்கிறது. குறிப்பாக மீனவர்கள், போராட்டத்தில் பங்கேற்ற மீனவர்களின் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் பற்றிய சிந்தனை எங்களை உறங்கவிடாமல் செய்வதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT