தமிழ்நாடு

அராஜகச் செயல்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை: முதல்வர்-துணை முதல்வர் கூட்டறிக்கை

DIN

அதிமுக ஆட்சியில் அராஜகச் செயல்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை என்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இருவரும் கூறியிருப்பதாவது:
தமிழகம் எனும் அமைதியான குளத்தில் பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா கல் எறிந்து விட்டார் என்பதுதான் தமிழக மக்களின் தீராத கோபமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோர், தலைவர்களின் சிலைகளை, குறிப்பாக பெரியார் சிலையை அவமதிக்கும் நடவடிக்கைளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர். கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்னையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இன்னும் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். பெரியாருக்கு எதிரான பதிவை நான் போடவில்லை. எனக்குத் தெரியாமல் நடந்து விட்டது. அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஹெச்.ராஜா கூறியிருக்கிறார். இருந்தபோதும், தமிழக மக்களின் மனம் புண்பட்டுப் போய்யுள்ளது. பெரியாரை நேசிப்போரின் நெஞ்சம் உடைந்து போயுள்ளது.
அதிமுக தயாராக இல்லை: பெரியாரை அவமதிக்கும் எந்தச் செயல்களையும் ஏற்றுக் கொள்ள தமிழக மக்களும், அதிமுகவும் தயாராக இல்லை. நாங்கள் பெரியாரை நேசிப்பவர்கள். பெரியாரை பூஜிப்பவர்கள். பெரியாரை பின் தொடர்பவர்கள். அதிமுக எனும் வீரிய விருட்சத்துக்குள் பெரியாரும் இருக்கிறார். இதை மறந்து விடக் கூடாது. தமிழக அரசானது அராஜகச் செயல்களை அனுமதிக்கும் என்று யாரும் கனவில் கூட நினைத்திட வேண்டாம்.
எல்லா வகைகளிலும் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தில், எப்படியாவது குழப்பம் விளைவித்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று கருதுவோரின் எண்ணம் என்றைக்கும் பலிக்காது. அதற்கு தமிழக அரசு இடம் கொடுக்காது என்று தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT