தமிழ்நாடு

சரக்கு ரயில் தடம் புரண்டது: போக்குவரத்து பாதிப்பு

DIN

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரயில் தடம் புரண்டதை அடுத்து காட்பாடி-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் 3 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கம்மம் நகருக்கு உர மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகே வந்தது. அப்போது அதன் 7 மற்றும் 8-ஆவது பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்ததால் மற்ற பெட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இதையடுத்து அவ்வழியே அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஜோலார்பேட்டை-அரக்கோணம், திருவனந்தபுரம்-சென்னை, பெங்களூரு-சென்னை, ஹூப்ளி-சென்னை, பெங்களூரு-சென்னை லால்பாக் உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 
இதைத் தொடர்ந்து, மீட்புப் பணிக்காக அரக்கோணத்தில் இருந்து சிறப்பு ரயிலில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் வந்தனர். நண்பகல் 12 மணி அளவில் இரு பெட்டிகளும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து, ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரயில்களும் புறப்பட்டன. 
சரக்கு ரயில் பெட்டிகள் சரியாகப் பராமரிக்கப்படாமலும், சக்கரங்களை பெட்டியுடன் இணைக்க இருந்த இணைப்புகள் உடைந்ததாலும் பெட்டிகள் தடம் புரண்டு விட்டதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், சரக்கு ரயில் பெட்டிகளைச் சீரான இடைவெளிகளில் பராமரிப்புக்கு அனுப்பாமல் தொடர்ந்து இயக்குவதால் இதுபோன்ற சம்பவங்கள் நேரிடுவதாகவும், இதுவே அதிக வேகத்தில் ரயில் இயக்கப்பட்டிருந்தால் அனைத்துப் பெட்டிகளும் கவிழ்ந்திருக்கும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைந்தன. இதேபோல, சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில்களும், தாமதமாக சென்றன. குறிப்பாக, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து சென்னைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாக வந்தன.
இதேபோல, சென்னையில் இருந்து வெளியூருக்கு புறப்பட்ட ரயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. முக்கியமாக சென்னை சென்ட்ரல்-கே.எஸ்.ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-ஹூப்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

SCROLL FOR NEXT