குந்தா நீரேற்று புனல் மின் திட்டத்தில் வரும் 2021-22ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 3 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் 122-ஆவது மலர்க் காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தலைமை வகித்தார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
இந்த மலர்க் காட்சியில் துலிப், டிஸ்பக்ஸ், கேளா லில்லி, சிலிகோனியம் உள்ளிட்ட மலர்கள் 25,000 பூந்தொட்டிகளிலும், கண்ணாடி மாளிகையில் 5000 பூந்தொட்டிகளிலும் பார்ப்போர் மயங்கும் வகையில் மிக நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளன.
பல திட்டங்களைச் செயல்படுத்தி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதகைக்கு அழகு சேர்த்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. உன்னத உதகை திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. உதகை ஏரி சுத்திகரிப்பு நிதியிலிருந்து கோடப்பமந்து கால்வாய் தூர்வாரி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. நிகழாண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் 100 ஹெக்டேர் பரப்பளவில் ஸ்ட்ராபெரி பயிர் விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ. 50 லட்சமும், திசு வளர்ப்பு மூலம் ஸ்ட்ராபெரி உற்பத்தி செய்ய ரூ. 20 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தினசரி 3 மில்லியன் மின்சாரம் உற்பத்தி: தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்காகவும், மின் மிகை மாநிலமாக மாற்றவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் ஒருபகுதியாக எரிசக்தித் துறையின் சார்பில், நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு கிராமம், காட்டுக்குப்பை பகுதியில் ரூ.1, 850 கோடி மதிப்பீட்டில் குந்தா நீரேற்று புனல்மின் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக வரும் 2021-2022ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 3 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆண்டுக்கு 1,095 மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழகத்துக்கு கூடுதலாகக் கிடைக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைவருமான விக்ரம் கபூர், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், உதகை சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் தலைவர் அ.மில்லர், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அ.பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
உதகை மத்தியப் பேருந்து நிலையம் சீரமைப்புக்காக கடந்தாண்டிலேயே நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், மண்ணின் தன்மை இலகுவாக இருப்பதை அறிந்து மண் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் கிடைத்த அறிக்கையின்படி இப்பேருந்து நிலையம் சீரமைப்பு பணிகளுக்கான தொகை கூடுதலாகி விட்டது. அதனால் திருத்தப்பட்ட புதிய அறிக்கையை வைத்து புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.