சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் அண்மையில் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், ஓட்டுநர் பயிற்சி மையங்கள், தன்னார்வ அமைப்புகள், மாணவ-மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்ட சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பை வலியுறுத்திப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
"தனி மனித ஒழுக்கமே சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும்' என வலியுறுத்தப்பட்டது. முறையான சாலை மற்றும் வாகனப் பயன்பாட்டால் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது, இன்னுயிர்கள் காக்கப்படுகின்றன.
சாலை விபத்துகள் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் நடப்பதே. இதற்குப் பல காரணங்களை சொல்லலாம். சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, வாகன ஓட்டிகளிடம் பொறுப்புணர்வு இல்லாமை, கவனச் சிதறல், விதிமுறைகளை கடைப்பிடிக்காதிருத்தல், வாகனங்கள் பற்றி அறியாமை, அவசரம், அலட்சியம், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றைச் சொல்லலாம்.
வாகனங்களால், அதாவது, வாகன ஓட்டிகளால் நிகழும் விபத்துகளைப் போலவே, சாலைகளின் மோசமான நிலையாலும் பல சமயங்களில் விபத்துகள் நிகழ்வதுண்டு. நெடுஞ்சாலைகளிலும் நகர்ப்புறச் சாலைகளிலும் உரிய பாதுகாப்பு, எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்படாததும் விபத்துக்கு காரணமாகிறது.
பொதுவாக அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையும் அதிக அளவில் விபத்துகள் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. காரணம், அத்தகைய நேரங்களில் ஓட்டுநர்களுக்கு அதிக தூக்க கலக்கம் ஏற்படுவதுண்டு.
இதுகுறித்து ஆலங்குளம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.உதயராஜ் கூறியது: வாகன ஓட்டிகள் முன்பெல்லாம் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கும்போது, சோர்வான நிலையில், தூக்கம் வரும் தருவாயில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி தேநீர் குடித்துவிட்டு மீண்டும் வாகனங்களை இயக்குவது வழக்கம். தற்போது இரவு 11 மணிக்கு மேல் தேநீர் கடைகள், ஹோட்டல்களை திறக்க காவல் துறை அனுமதிப்பதில்லை. இருப்பினும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சரக்குகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால், வேறு வழியின்றி சரக்கு வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை தொடர்ந்து இயக்குகின்றனர். போதிய ஓய்வு இல்லாத நிலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சில ஓட்டுநர்கள் தூக்கம் வராமல் இருக்க புகைப்பிடித்தல், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
எனவே, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், வாகன ஓட்டுநர்கள் பயனடையும் வகையிலும், இரவு நேர தேநீர் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை திறக்க காவல் துறை அனுமதிக்கலாம். தமிழக அரசு சாலையோரம் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும். இதன்மூலம் போதையில் வாகனங்கள் இயக்குவது தவிர்க்கப்படும் என்றார் அவர்.
தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயலர் தென்காசி வைகை குமார் கூறியது: சாலைகளின் வடிவமைப்பு, தரம் மிக முக்கியம். வாகனங்களின் தரமும், அவற்றின் வேகமும் கூட விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றன. மக்களிடம் சகிப்புத் தன்மை மிக முக்கியம். சாலையை சாகசம் காட்டப் பயன்படும் இடமாக கருதக் கூடாது. வாகனங்கள் இயக்கும் போது செல்லிடப்பேசியில் பேசக் கூடாது. புளுடூத் கருவி மற்றும் ஹெட்போன் பயன்படுத்தியும் பேசக்கூடாது. இவை ஓட்டுநரின் கவனத்தை சிதறச் செய்யும். அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கக் கூடாது. வேக வரம்பை மீறாமல் செல்ல வேண்டும். கார் ஓட்டுநர்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் சீட் பெல்ட் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும். ஏர் பேக் உள்ள வாகனங்களில் முன்பக்க பம்பர் பொருத்தக் கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் இயக்க கூடாது. சாலை சந்திப்பில் போக்குவரத்து காவலர் தரும் சைகைகள், சிக்னல் விளக்குகள் ஆகியவற்றை வாகன ஓட்டிகள் மதித்து, கட்டுப்பாடுடன் செல்ல வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாத எந்த நபரையும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கக் கூடாது. 18 வயதுக்கு குறைந்த மாணவர்கள் வாகனங்கள் இயக்கி விபத்து ஏற்படும் பட்சத்தில், சட்டத்தின் பிடியில் பெற்றோர் சிக்கி தண்டிக்கப்படுவர் என்பதை உணர வேண்டும் என்றார் அவர்.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், உரிமம் பெறும் வயதை அடையாத தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்களை அளித்து ஓட்டச் செய்யும் பெற்றோர்-வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்க இயலும்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு துணைபோகும் விதமாக காவல் துறையினர் எந்த வகையிலும் நடந்து கொள்ளக் கூடாது. மாறாக, வாகன ஓட்டிகளின் விதிமீறல்களுக்குத் துணைபோனால், சட்ட மீறலும் தொடரும், விபத்துகளும் தொடரும்.
தொழில்முறை வாகன ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் பரிசோதனை செய்து சான்று ஒப்படைக்கச் செய்யவேண்டும். சாலைகளில் உள்ள திருப்பங்கள், வேகத்தடைகள், பாலங்கள் இருப்பது குறித்து மிக தெளிவாகப் பெரிய எழுத்துகளில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். சாலைகளை உரிய அளவு எஸ்கேப் ஏரியாவுடன், சரியாக வடிவமைக்க வேண்டும்.
விபத்துகளால் குடும்பத் தலைவரை இழக்கும்போது, அந்தக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்பு, பொருளாதார பாதிப்பு உள்ளிட்டவை குறித்து ஒவ்வொரு மனிதனும் சிந்தித்தால், வாகனப் போக்குவரத்தை கவனமாக கையாளுவர். ஒவ்வொரு தனி மனிதனும் சாலைப் போக்குவரத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் மட்டுமே சாலைப் பாதுகாப்பு முழுமையாக சாத்தியமாகும்.
அரசு செய்ய வேண்டியது
சாலை விபத்தில் உயிரிழப்புக்கு மிக முக்கிய காரணம் உரிய நேரத்தில் முதலுதவியும் மருத்துவ வசதியும் கிடைக்காததே. எனவே, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் கூடுதல் அவசர விபத்து சிகிச்சை மையங்கள், விரைவான மீட்புக் குழுக்கள், உடனடி முதலுதவி வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.