தமிழ்நாடு

800 அரசு ஆரம்ப பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைகளின் கல்வி வாய்ப்பு கருகி விடும்! ராமதாஸ் கண்டனம்

DIN

800 அரசு ஆரம்ப பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைகளின் கல்வி வாய்ப்பு கருகி விடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள 800-க்கும் கூடுதலான அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின்  இடைநிற்றலைக் கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் புதிய பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்  என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசின் இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. பல நூறு பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இன்னும் சில  தொடக்கப் பள்ளிகளில் சில வகுப்புகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்று கூறப்படுகிறது. இந்த பள்ளிகளின் பட்டியலைத் தயாரித்துள்ள தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை எந்த நேரமும் அதற்கான அரசாணையை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி பள்ளிகளை மூடுவது என்பது காலணியின் அளவு குறைவாக இருந்தால் அதற்கேற்ற வகையில் கால்களை வெட்டி குறைக்கும் முட்டாள்தனத்திற்கு இணையான செயலாகும்.

தமிழகத்திலுள்ள அரசாங்க பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது உண்மை தான். ஆனால், அதற்கு ஆசிரியர்களையோ, மாணவர்களையோ குறை கூறி பயனில்லை. அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் சேராததற்கு அரசாங்கம் தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்க்குறை நிலவுவதாலும், கட்டமைப்பு வசதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லாததாலும் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். தமிழகத்திலுள்ள பல அரசு பள்ளிகளில் கல்வித்தரம் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இருந்தாலும் கூட, அரசு பள்ளிகள் என்றால் அங்கு கல்வித் தரமாக இருக்காது என்ற  தவறான எண்ணம் கடந்த 25 ஆண்டுகளாக மக்களின் பொதுப் புத்தியில் பதிவாகி விட்டது. இந்த மாயையை அகற்றவும், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு எதுவும் செய்யவில்லை.

உதாரணமாக, தமிழகத்தில் உள்ள கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் 48 சதவீத பள்ளிகள் இரு ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் என்றும், தொலைதூரங்களில் உள்ள பள்ளிகளில் ஓர் ஆசிரியர் நிர்வாகப் பணிகளுக்காக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் மீதமுள்ள இன்னொரு ஆசிரியர் மட்டுமே மாணவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மொத்தம் 5 வகுப்புகளுக்கான மாணவர்களை பெரும்பாலான நேரங்களில் ஓர் ஆசிரியர் மட்டுமே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர்களால் எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும்? அத்தகைய பள்ளிகளில் கல்வி எப்படி தரமாக இருக்கும்?

ஒரு மாணவர் கூட இல்லாத அரசு பள்ளிகள், பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் தனியார் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், அவற்றில்  இடம் கிடைக்காது என்று கூறும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதற்குக் காரணம் அந்த பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இருப்பது தான். அதே போன்ற வசதிகள் அரசு பள்ளிகளில் இருந்தால் அங்கும் மாணவர்கள் அதிகமாக சேருவார்கள். அவ்வாறு செய்ய ஆட்சியாளர்கள் தவறியதால் தான் அரசு பள்ளிகளில் போதிய அளவில் மாணவர்கள் சேரவில்லை. அரசு பள்ளிகளின் இன்றைய நிலைக்கு அரசு தான் காரணம் என்னும் நிலையில், அந்த பள்ளிகளை மூடி மாணவர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?

5 வயது நிறைந்த அனைத்துக் குழந்தைகளும் தொடக்கப்பள்ளியில் சேருவதை உறுதி செய்ய, அருகமைப் பள்ளி தத்துவத்தின்படி, ஒவ்வொரு குடியிருப்பிலும் ஓர் அரசுப் பள்ளி இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், இப்போது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்ற நிலை தான் உள்ளது. இந்த நிலையை மாற்ற இன்னும் கூடுதலாக அரசுத் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய நிலையில், இருக்கும் பள்ளிகளையும் மூடத் துடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஊரகப்பகுதிகளில் மேல்நிலை வகுப்புகளில் 30-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள், நகர்ப்பகுதிகளிலும், ஆங்கில வழிக் கல்வி முறையிலும் 15-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள் ஆகியவற்றை மூடவும் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த திட்டங்கள் செயல்வடிவம் பெற்றால் கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுவிடும்.  இது அனைவருக்கும், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது ஆகும். இந்த அநீதியை அனுமதிக்க முடியாது.

எனவே, மாணவர்கள் இல்லாததையும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் காரணம் காட்டி 800 தொடக்கப் பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, அந்த பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல் ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT