தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு சிகிச்சை: பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

DIN


தமிழக சிறைச்சாலைகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பரிசீலிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சிறைச் சாலைகளில் உள்ள கைதிகளின் வாழ்வாதாரம், கண்ணியம் உள்ளிட்டவற்றை பாதுகாக்க அனைத்து உயர்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து பொதுநல வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாமாக முன்வந்து பொதுநல வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு எந்த மாதிரியான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞர் ஆர்.வைகையை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
தமிழக சிறைச்சாலைகளில் அவர் ஆய்வு மேற்கொண்டு முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், மனித உரிமைகள் ஆணைய உத்தரவுப்படி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சிறைச்சாலைகளில் வைத்திருக்கக் கூடாது. ஆனால், தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று வயோதிகத்தின் காரணமாக கைதிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 65 வயதுக்கு மேலான கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவும், மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்கவும் தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்குரைஞர் வைகை, சிறைச்சாலை விதிகளின்படி, கைதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற குழுக்கள் எதுவும் அமைக்கப்படவில்லை என்றார்.
இதனையடுத்து, தமிழக சிறைச்சாலைகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பரிசீலிக்க தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 13 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT