தமிழ்நாடு

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை: அதிகரித்து வரும் சுகப் பிரசவங்கள்!

ஜி. சரவணப் பெருமாள்


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகப் பிரசவங்கள் அதிகரித்து வருவதால் இங்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போதெல்லாம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. தாய், சேய் இருவரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ காப்பாற்ற நேரிடும் தருணத்தில், தவிர்க்க முடியாமல், அறுவைச் சிகிச்சை செய்யப்படுவதுண்டு. இதுபோன்ற சூழலில், தமிழகத்திலேயே திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகப் பிரசவங்கள் அதிகரித்து வருவது பல்வேறு தரப்பினரிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

இங்கு 2018 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் 7,097 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில், 2,840 கர்ப்பிணிகளுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது மொத்த பிரசவத்தில் 40 சதவீதம். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெற்ற பிரசவங்களில் இது மிகவும் குறைவு என்பது சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகரிக்கும் சுகப்பிரசவங்கள்: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2017-இல் 8,108 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. 2018 ஜனவரி முதலே பிரசவங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் வெகுவாக அதிகரித்து வருகிறது. 2018 ஜனவரியில் 593 பிரசவங்களும், பிப்ரவரியில் 506 பிரசவங்களும், மார்ச் மாதத்தில் 643 பிரசவங்களும் நடைபெற்றுள்ளன.

மேலும், ஏப்ரல் மாதம் 632 பிரசவங்கள், மே 706, ஜூன் 657, ஜூலை 742, ஆகஸ்ட் 805, செப்டம்பர் 845, அக்டோபர் 968 என 10 மாதங்களில் 7,097 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்குக் காரணம் இங்கு சுகப் பிரசவத்துக்கு முக்கியத்துவம் தரப்படுவதுதான்.

2017ஆம் ஆண்டில் பிரசவத்துக்கு வந்த தாய்மார்களில் 12 பேர் இறந்தனர். இந்நிலையில், 2018 அக்டோபர் வரை, 4 பேர் மட்டுமே இறந்தனர். இவர்களும், பிரசவத்துக்கு சரியான காலம் கடந்த பிறகு வந்ததால் உயிரிழக்க நேரிட்டதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

புதுப்பொலிவு பெற்ற மகப்பேறுப் பிரிவு 

பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் வசதிகளுடன் மகப்பேறுப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. "லக்ஷியா' என்ற திட்டம் மூலம் தனியார் மருத்துவமனைகளில் காணப்படுவது போன்ற வசதிகள் புதிய மகப்பேறுப் பிரிவில் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, வயிற்றில் இருக்கும் சிசுவின் இதயத் துடிப்பை மானிட்டர் மூலம் கணக்கிடும் கருவி (சிடிஜி), 10 கர்ப்பிணிகளுக்கு ஒரே நேரத்தில் பிரசவம் பார்க்கும் வசதி, ஒவ்வொரு படுக்கைக்கும் நேராக குழாய் மூலம் பிராண வாயு (ஆக்சிஜன்) வழங்கும் முறை, கர்ப்பிணிகளின் இதயத் துடிப்பு, சுவாசத்தை மானிட்டர் மூலம் கண்காணிக்கும் கருவி ஆகியவை இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன.

"மருத்துவர்களுக்கு  கிடைத்த அங்கீகாரம்' 

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.நடராஜன் கூறியதாவது: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவத்துக்குத் தேவையான 100 சதவீத முயற்சிகளை மகப்பேறு பிரிவு மருத்துவர்கள் குழு எடுத்து வருகிறது.

கண்டிப்பாக அறுவைச் சிகிச்சை செய்தே தீர வேண்டும் என்ற பட்சத்தில் மட்டுமே அறுவைச் சிகிச்சை மூலம் தாய், சேய் ஆகியோரின் உயிரைக் காப்பாற்றுகிறோம். 

பிரசவத்தின்போது ஏற்படும் தாய்மார்களின் இறப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால், சுகப் பிரசவத்தை எதிர்பார்த்து இங்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. இது மகப்பேறுப் பிரிவு மருத்துவர்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT