தமிழ்நாடு

தமிழகத்தை ஒதுக்கிவிட்டு எழுதப்படும் இந்திய வரலாறு முழுமையானதாக இருக்காது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

DIN

தமிழகத்தை ஒதுக்கிவிட்டு எழுதப்படும் இந்திய வரலாறு முழுமையான தேசத்தின் வரலாறாக இருக்க முடியாது. எனவே, தமிழக வரலாற்றை இந்திய மக்கள் அனைவரும் அறியும் வகையில் தேசிய வரலாறு படைக்கப்பட வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் வெள்ளி விழா ஆண்டு ஆய்வரங்கம் சென்னை பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை  தொடங்கியது. விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: 
தமிழகத்தை மறைத்துவிட்டோ அல்லது ஒதுக்கிவிட்டோ எழுதப்படும் இந்திய வரலாறு என்பது ஒரு முழுமையான தேசத்தின் வரலாறாக, தேசிய வரலாறாக இருக்க முடியாது.  தமிழ் - திராவிடம் என்கிற பண்பாட்டு மரபுகள், திராவிட மொழிக் குடும்பம், சைவ, வைணவ மரபுகள், கோயில் - சிலை வழிபாடுகள், திராவிடக் கலைகளான தென்னிந்திய கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை, இந்தியாவின் வைதீகம் உள்ளிட்ட பல்வேறு மரபுகளில் மிகப் பெரிய தாக்கங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன.  
இந்திய வரலாற்றிலேயே கடல் கடந்து, பேரரசை உருவாக்கிய ஒரே அரச வம்சம் தஞ்சையைச் சார்ந்த சோழர் வம்சம்தான்.  
அது மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பண்பாடு, கலைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களும் தமிழர்களே. அதனால்தான் தமிழ் மண்ணில் சமணமும், பெüத்தமும், சைவமும், வைணமும், இஸ்லாமும், கிறிஸ்தவமும் செழித்து வளர்ந்தன. ஆனால், இந்திய தேசத்தின் வரலாறு வரையப்படும்போது, இதனைக் கருத்தில் கொள்ளாமல், கங்கைக் கரையை மையமாக வைத்து வரையப்பட்டது.  அதனால்தான் தென்னிந்தியா - தமிழகம் போன்றவற்றின் பண்பாடுகள் புறக்கணிக்கப்படக் கூடிய துணை மரபுகளாக இருந்தன.  கங்கை கரை நாகரிகங்களின், பேரரசுகளின், பண்பாடுகளின், விரிவாக்கம் மட்டுமே இந்திய வரலாறு என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டது.
இது தவறான அணுகுமுறை என்பதால்தான், வின்சென்ட் ஸ்மித் போன்ற வரலாற்றாளர்கள் இந்திய வரலாறு காவிரிக் கரையிலிருந்து துவங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினர். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. 
எனவே தான், தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை போன்ற தமிழ் வரலாற்று ஆய்வு அமைப்புகள், தமிழக பண்பாடு குறித்து மறைக்கப்பட்ட தகவல்களை, அறிவியல் முறையில் உறுதி செய்து,  தமிழகத்துக்கும் தென்னகத்துக்கும், இந்திய தேசிய வரலாற்றில் உரிய இடம் கிடைக்கச் செய்ய முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. 
அதே நேரம், நவீன இந்திய வரலாற்றிலும், தமிழகத்தின் அளப்பரிய பங்களிப்பு அதற்கு உரிய அளவில் இடம் பெறவில்லை என்பதும் வேதனை அளிக்கிறது. தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு சமூக சேவகர்கள் ஆற்றிய பணி, இருட்டடிப்பு செய்யப்பட்டு இந்திய தேசிய வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளன.  
இங்கிலாந்து நாட்டில் மகளிருக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்பே, சென்னை ராஜதானியில் மகளிருக்கு வாக்குரிமை கிடைக்கச் செய்த கட்சி,  நீதிக் கட்சி. அதற்கும் இந்திய வரலாற்றில் உரிய இடம் அளிக்கப்படவில்லை.
எனவே, இந்த வரலாறுகளையெல்லாம் இந்திய மக்கள் அனைவரும் அறியும் வகையில் இந்திய தேசிய வரலாறு படைக்கப்பட வேண்டும் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
தினமலர் ஆசிரியருக்கு கௌரவம்: இந்த நிகழ்ச்சியில் தினமலர் ஆசிரியரும் நாணயவியல் ஆராய்ச்சியாளருமான ஆர்.கிருஷ்ணமூர்த்தியை  கௌரவிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு நன்றி தெரிவித்து ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமூர்த்தி அனுப்பிய ஏற்புரை நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது.
விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.துரைசாமி, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT