தமிழ்நாடு

அரசுப் பணியில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

DIN


விளையாட்டு வீரர் -வீராங்கனைகளுக்கு அரசுப் பணிகளில் வழங்கப்படும் உள்ஒதுக்கீடு 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு அறிவித்ததையொட்டி, விளையாட்டுச் சங்கங்களின் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு, சென்னையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேலும், தேசிய பள்ளிக் குழும விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு காசோலைகளையும் அவர் அளித்தார்.
இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:-
விளையாட்டுத் துறையில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்குவதற்கு அரசு என்னதான் திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியிடங்களை நிரப்புவதில் அவர்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற குறைபாடு உள்ளது. 
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட பதவிகளில், தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடாக அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் அறிவித்து, அதனைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 
உயர்நிலைக் குழு: இதன் முதல்கட்டமாக, தலைமைச் செயலாளர் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து, இந்த உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும். இந்த அறிவிப்பு அதிக அளவில் இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடச் செய்ய வழிவகை செய்யும். இந்த நிலையில், விளையாட்டு வீரர் -வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் தற்போதுள்ள 2 சதவீத உள்ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், பா.பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிளாஸ்டிக் தீங்கு: விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
சென்னையில் விளையாட்டுச் சங்கங்கள் சார்பில் முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அதில், பிளாஸ்டிக் தடை தொடர்பாக அவர் பேசியது:-
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. 
இந்தத் திட்டம் முழுமையாக வெற்றி பெறுவது நமது இளைஞர்களின் கையில் உள்ளது. இளைஞர்களாகிய நீங்கள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் உருவாக வழிவகை ஏற்படும் என்றார் முதல்வர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT