தமிழ்நாடு

கல்லூரிக்குள் புதுவை ஆளுநரை சிறை பிடித்த மாணவர்கள்

DIN


புதுவை அரசு சட்டக் கல்லூரியில் புதன்கிழமை ஆய்வுக்குச் சென்ற துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை வெளியேற விடாமல், நுழைவு வாயில் கதவை மாணவர்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை ஆளுநர் கிரண்பேடி தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 
அந்த வகையில், புதுச்சேரி அருகே காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் புதன்கிழமை ஆய்வு செய்யப் போவதாக அறிவித்து இருந்தார். அந்தக் கல்லூரிக்கு பகல் 12.50 மணிக்கு வருவதாகத் தெரிவித்திருந்த அவர், முன்கூட்டியே முற்பகல் 11.45 மணியளவில் வந்துவிட்டார்.
கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்ற அவர், முதல்வர் மற்றும் பேராசிரியருடன் மழைநீர் சேகரிப்பு குறித்துப் பேசினார். பின்னர், ஆய்வு செய்வதற்கு புறப்பட்டார். 
அப்போது மாணவர்கள் ஒன்று திரண்டு வந்து, கல்லூரியிலும், விடுதியிலும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை; அவற்றை நிறைவேற்றித் தரவேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு, ஆளுநர் தான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாகத் தான் ஆய்வு செய்ய வந்ததாகக் கூறினார். இருப்பினும், மாணவர்கள் தங்களுடைய கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினர். அதற்கு ஆளுநர் கிரண் பேடி உரிய பதில் அளிக்கவில்லை. இதனால், மாணவர்கள் கோபம் அடைந்தனர்.
அப்போது ஆளுநரிடம், நீங்கள் எல்லா விஷயங்களிலும் தலையிடுகிறீர்கள்; எங்கள் கோரிக்கையை மட்டும் ஏன் நிறைவேற்ற மறுக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆளுநர் அங்கிருந்து புறப்படத் தயாரானார். உடனே மாணவர்கள் நுழைவு வாயில் அருகே 
மோட்டார்சைக்கிள்களை நிறுத்தி செல்லவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், சில மாணவர்கள் பிரதான கதவை மூடினர். இதனால், ஆளுநரால் கல்லூரியைவிட்டு வெளியேற முடியவில்லை. 
இதையடுத்து, பாதுகாப்பு கருதி கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். பின்னர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 
இருப்பினும், மாணவர்கள் ஆளுநரை வெளியே செல்லவிடாமல் தடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.
இதனால், மாணவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், ஒருவழியாக மாணவர்கள் சமாதானம் அடைந்தனர். 
இதையடுத்து, அங்கிருந்த மோட்டார்சைக்கிள்களை போலீஸார் அப்புறப்படுத்தி, ஆளுநரின் கார் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். பின்னர், ஆளுநரின் கார் வெளியே சென்றது. இந்தச் சம்பவம் காரணமாக சட்டக் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT