தமிழ்நாடு

தமிழ் மேம்பாட்டுக்கு ரூ.30 கோடியில் புதிய திட்டங்கள்!: தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை செயலர் ரா.வெங்கடேசன்

DIN


தமிழ் மொழி மேம்பாட்டுக்காக நடப்பாண்டில் ரூ.30 கோடியில் புதிய திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்திவருகிறது என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் ரா.வெங்கடேசன் கூறினார். 
மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் பெருந்திட்ட வளாகத்தில், மலேசியாவில் இன்றைய மரபுக் கவிதைகள் நிலை' எனும் தலைப்பில் நடப்பு ஆண்டின் 12 ஆவது ஆய்வரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆய்வரங்கிற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் முன்னிலை வகித்தார். மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு.சேகர் தொடக்கவுரையாற்றினார். 
நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் ரா.வெங்கடேசன் ஆற்றிய விழாப் பேருரை: மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் கட்டடத்துக்கு நிதி அளித்து அதை நிறைவேற்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2016-17 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஆய்வரங்கம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது. 
மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் மொழி மேம்பாடு சிறப்பாகவே உள்ளது. அங்கு தமிழ் கற்பிக்கும் பள்ளிகள் ஏராளமாகச் செயல்பட்டுவருகின்றன. தமிழகத்திலும் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி கற்பிக்கப்படுகிறது. 
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இளந்தலைமுறையினருக்கு தமிழின் தொன்மை, மரபுகளை கற்பிக்கும் வகையில் தமிழ் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டுவருகிறது. அதற்காக ஆண்டுதோறும் ரூ.20 லட்சம் செலவிடப்படுகிறது. தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கு பல நலத்திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.
வரும் 2018-19 ஆம் ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு மட்டும் ரூ.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ரூ.30 கோடிக்கான புதிய திட்டங்கள் தமிழ் வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படுகின்றன. அதற்காக 45 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முதுநிலைத் தமிழ் பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஊக்கத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்பது முதல் பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் மொழி வளரவும், இளந்தலைமுறையினர் தமிழ் மொழியின் மேம்பாட்டில் ஈடுபாடு காட்டவும் அரசு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் மலேசிய பத்திரிகையாளரும், கவிஞருமான ந.கு.முல்லைச்செல்வன், மலேசியாவில் இன்றைய மரபுக்கவிதைகளின் நிலை' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT