தமிழ்நாடு

தேர்தல் களத்தில் மாணவர்கள் பங்கெடுப்பது நாட்டுக்கு செய்யும் கடமை: கமல்

DIN


தேர்தல் களத்தில் மாணவர்கள் பங்கெடுப்பது நாட்டுக்கு செய்யும் கடமை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (கோவை) யங் இந்தியன்ஸ், யுவா, இந்திய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சார்பில், இளம் தொழிலதிபர்கள், யுவா அமைப்பின் மாணவர்கள் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியில் புதன்கிழமை கமல்ஹாசன் பேசியதாவது:
தமிழகத்தில் மாணவர்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். ஆனால், என்னை மாணவர்கள் மத்தியில் பேச அனுமதிக்கக் கூடாது என மறைமுகமாகத் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். 
பொதுவாக கல்வி நிலையங்களில் அரசியல் குறித்து விவாதிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், கல்லூரியில் அரசியலுக்கு என்று தனிப் பாடப்பிரிவு வைத்துள்ளனர். 
நமது வாழ்க்கையை வெகுவாக பாதிக்கக்கூடியது அரசியல்தான். அதனைப் புரிந்து கொள்ள மாணவர்கள் அரசியல் குறித்து தங்களுக்குள் விவாதிக்க வேண்டும். எது நல்ல அரசியல் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். அதனைப் பிறர் சொல்லி உணராமல் தாங்களாகவே உணர வேண்டும். 
இந்தியாவை மாணவர்களால்தான் செதுக்க முடியும். அதற்கான உரிமையும், கடமையும் மாணவர்களுக்கு உள்ளது. தேர்தலில் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால், தேர்தல் களத்தில் மாணவர்கள் பங்கெடுப்பது நாட்டுக்கு செய்யும் கடமை ஆகும் என்றார். 
இதைத் தொடர்ந்து மாணவர்கள், தொழில்முனைவோர் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
மாணவர்கள் வேலைவாய்ப்பு தேடுபவர்களாக இல்லாமல் தொழில்முனைவோராக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். எனது வாழ்க்கையில் எனக்கு நானே தடையாக இருந்துள்ளேன். எனக்கு பல குருமார்கள் போதித்துள்ளனர். அதனைக் கேட்டு, கற்றுக்கொண்டு தாமதமாகவே செயல்பட்டுள்ளேன். ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும்போது மன அழுத்தம், கோபம் ஏற்படுவது இயல்பு. அவை நமக்கு பலப் பாடங்களை கற்றுக் கொடுக்கும். எனவே அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். 
தற்போது உள்ள சூழலில் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், வேளாண்மை, கல்வித்துறையின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. வேளாண் நிலத்துக்கு அடியில் உள்ள கனிம வளங்கள் முக்கியம் என்றாலும், வேளாண் நிலத்தின் மேல் விளையக் கூடியவைதான் மக்களுக்கு முக்கியமானது. தாய்மொழியில் கல்வி கற்பதற்கு மாணவர்கள் முன்வர வேண்டும். அதே நேரத்தில் வேறு மொழியை கற்பதில் தவறு எதும் இல்லை என்றார்.

தனித்துப் போட்டி: நிர்வாகிகளின் கருத்து
தேர்தல்களில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்து என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தப் பயிலரங்கில் தங்களை விமர்சித்துக் கொள்ளவும், தேர்தலை எதிர்கொள்ளும் முறை குறித்தும் வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பயிற்சியளிக்கின்றனர். 
இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பிரசார ஆலோசகராக இருந்த அவிநாஷும் கலந்து கொண்டு உரையாற்றினார். 
பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது எங்களின் நிலைப்பாடாகும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. இதைவிட பெரிய தேர்தல் களம் வருவதால் அதற்குத் தயாராகி வருகின்றோம். உள்ளாட்சித் தேர்தலில் தலையிட வேண்டாம் என நினைக்கின்றோம். 
மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறோம். யாராக இருந்தாலும் நீதிமன்றத்தையும், காவல் துறையையும் விமர்சிக்கக் கூடாது. தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்பது பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாகும் என்றார்.

நான்கு இடங்களில் தலைமை அலுவலகம்
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கட்சித் தலைமை அலுவலகம் ஏற்படுத்தப்படும் என அக்கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் கட்சித் தலைமை அலுவலகம் அமைய வேண்டும் என்ற மரபை முறியடித்து, தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கட்சித் தலைமை அலுவலகம் அமைக்கப்படும். இந்த நான்கு அலுவலகங்களுக்கும் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக சென்று பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் சந்திப்பார். 
கட்சியின் செயற்குழு விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய உறுப்பினர்களாக சந்திரசேகரன், காந்தி கண்ணதாசன், குருவையா கருப்பையா, ஜான் சாமுவேல், ஜான்சன் தங்கவேல், சினேகன், தருமபுரி ராஜசேகர், வழக்குரைஞர் விஜயன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT