தமிழ்நாடு

வருமான வரிச் சோதனையால்.. தேர்தல் பிரசாரம் ஓய்ந்தாலும், ஓயாத பரபரப்பு!

DIN

  
இந்தியாவில் 2ம் கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நேரம் என்றாலே பரபரப்புதான். ஆனால்  அந்த பரபரப்பை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது அதிரடி சோதனையால் பரபரப்பைக் கூட்டி வருகிறார்கள்.

நாளை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்று ரத்து செய்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஆண்டிப்பட்டியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு, கைது நடவடிக்கை, 150 பேர் மீது வழக்கு என மற்றொரு பக்கம் பரபரப்பு அதிகரித்தது.

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் துப்பாக்கி சூடு குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதன் விவரம்:

இன்று இரவு 8.15 மணி அளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அமமுக அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது காவலர்களை அங்கிருந்த சிலர் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மேலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அங்கு பைகளில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அமமுக அலுவலகத்தில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிலர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் அவர்களை கைது செய்ய காவலர்கள் விரைந்துள்ளனர். இங்கிருந்து எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு  இந்த சோதனைகுறித்து முழு விவரம் நாளை காலை தெரியவரும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் 10 பேர் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குறிஞ்சிநகர் 7-ஆவது தெருவில் ஒரு வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டின் அருகேயுள்ள மற்றொரு வீட்டில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில் கனிமொழியின் உதவியாளர்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவுபெற்ற நிலையில், இரவு 8.30 மணியளவில் வருமானவரித் துறை அதிகாரி கார்த்திகா தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர் கனிமொழி தங்கியுள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 6 பேரும் வந்திருந்தனர்.

அப்போது, கனிமொழியுடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். கனிமொழி, அவரது குடும்பத்தினர் தவிர மற்றவர்களை வருமான வரித் துறையினர் வெளியே அனுப்பிவிட்டு சோதனையைத் தொடர்ந்தனர். இந்தச் சோதனை இரவு 10.30 மணி வரை நீடித்தது. அதன்பிறகு வருமான வரித் துறை அலுவலர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சோதனை குறித்து தகவலறிந்து திமுகவினர் அங்கு குவியத் தொடங்கினர். மத்திய பாஜக அரசைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். 

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது: வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. வேலூரைப் போல தூத்துக்குடி தொகுதியிலும் தேர்தலை நிறுத்த சதி செய்கின்றனர். திமுகவினரை குறிவைத்து இச்சோதனை நடத்தப்படுகிறது. ஆளுங்கட்சியினர் வீடுகளில் இதுபோன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தாதது ஏன் என்றார் அவர்.

எதிர்க்கட்சியினரைக் குறி வைத்து இந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டுவது போலவே, வருமான வரித்துறையினரும் நடந்து கொள்கின்றனர். இதுவே மறைமுகமாக எதிர்க்கட்சியினருக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்து விடுமோ என்று ஏன் ஆளுங்கட்சிகள் சிந்திக்காமல் விட்டுவிடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT