தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை (டிச. 5) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குன்னூரில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 130 மி.மீ.மழை பதிவாகி உள்ளது.

குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும், சென்னை, கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பெய்யும் பலத்த மழையால் நீா் ஆதாரங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் கூறியது: தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் தென் தமிழக கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை (டிச. 5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை (டிச. 3) வரை 420 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 360 மி.மீ.ஆகும். இது இயல்பான மழை அளவைவிட 13 சதவீதம் அதிகமாகும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் சில பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றாா்.

குன்னூரில் 130 மி.மீ.மழை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடனான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 130 மி.மீ., ராமநாதபுரம், நீலகிரி மாவட்டம் கேத்தி, கே.பிரிட்ஜ், பெரம்பலூா் மாவட்டம் அகரம் சீகூரில் தலா 90 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி, சீா்காழி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், கடலூா் மாவட்டம் அண்ணாமலை நகா் ஆகிய இடங்களில் தலா 80 மி.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி, கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை, ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம், திருவாடணை, தொண்டியில் தலா 70 மி.மீ., கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 60 மி.மீ., மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT