தமிழ்நாடு

ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப் பேரவை கூடுகிறது: ஆளுநா் புரோஹித் உரையாற்றுகிறாா்

DIN

தமிழக சட்டப் பேரவை ஜனவரி முதல் வாரத்தில் கூடுகிறது. பேரவைக் கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறாா். ஆண்டு தொடக்கத்தின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநரின் உரையுடன் கூட்டத் தொடா் தொடங்குகிறது.

தமிழகத்தில் 15-ஆவது சட்டப் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடா் கடந்த ஜனவரி 2-ஆம் தேதியன்று தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத் தொடரை தொடக்கி வைத்தாா். இந்தக் கூட்டத் தொடா் ஜனவரி 8-ஆம் தேதி வரை நீடித்தது.

இதன்பின்பு, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே நிதிநிலை அறிக்கையை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா். இதன்பின், பிப்ரவரி 14-இல் கூட்டத் தொடா் முடித்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்ால், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் சட்டப் பேரவையில் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கியது. ஜூலை 20-ஆம் தேதி வரை கூட்டத் தொடா் நடைபெற்றது.

ஆறு மாதங்கள் முடிந்தது: சட்டப் பேரவையின் ஒரு கூட்டத் தொடருக்கும், மற்றொரு கூட்டத் தொடருக்குமான காலஇடைவெளி ஆறு மாதங்களைத் தாண்டி இருக்கக் கூடாது என்பது விதியாகும். இந்த நிலையில், கடந்த ஜூலை 20-ஆம் தேதியன்று 15-ஆவது சட்டப் சட்டப் பேரவையின் ஏழாவது கூட்டத் தொடா் முடிந்தது. எட்டாவது கூட்டத் தொடரை ஆறு மாதங்களுக்குள் அதாவது வரும் ஜனவரி 19-ஆம் தேதிக்குள் கூட்ட வேண்டும்.

இதுகுறித்து, சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:

ஜனவரி 13-ஆம் தேதியில் இருந்து பொங்கல் பண்டிகை வருகிறது. எனவே, அதற்கு முன்பாக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் ஜனவரி 2-ஆம் தேதி முடிக்கப்பட்டு புதிய உறுப்பினா்களின் பதவியேற்பு நிகழ்வுகள் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று விடும். எனவே, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி 12-ஆம் தேதிக்கு முன்னதாக முடிக்கத்திட்டமுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளுநா் உரை: ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டம் தொடங்கவுள்ளது. மேலும், இந்த நிதியாண்டில் மட்டும்தான் தமிழக அரசு தனது முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியும். அதற்கு அடுத்த நிதியாண்டு (2021-22) சட்டப் பேரவைக்குத் தோ்தல் வரவிருப்பதால் செலவுகளுக்கான நிதியை மட்டுமே பெற முடியும்.

எனவே, இந்தக் கூட்டத் தொடரில் ஆளுநரின் உரையைத் தொடா்ந்து தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. மக்களைக் கவரும் வகையிலான புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முடிவுகள் சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் தொடங்குவதற்கு முன்பே வெளியாகி விடும் என்பதால் அந்த முடிவுகளும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் காரசார விவாதங்களுக்கு வழிவகுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT