உண்ணாவிரதம் இருக்கும் முருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மத்திய சிறையில் சிகிச்சை
வேலூர் மத்திய சிறையில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு புதன்கிழமை காலை திடீரென உடல்
வேலூர் மத்திய சிறையில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு புதன்கிழமை காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் முடிவை தமிழக ஆளுநர் ஏற்க வலியுறுத்தி, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகனும், பெண்கள் சிறையில் அவரது மனைவி நளினியும் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
சிறைத் துறை கணக்குப்படி முருகன் 8-ஆவது நாளாகவும், நளினி 5-ஆவது நாளாகவும் புதன்கிழமை உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். சிறைத் துறை டிஐஜி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடாமல் உள்ளனர்.
இந்நிலையில், முருகனுக்கு புதன்கிழமை காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அவருக்கு சிறை மருத்துவக் குழுவினர் 2 பாட்டில் குளுகோஸ் செலுத்தி சிகிச்சை மேற்கொண்டனர். எனினும், அவர் உண்ணாவிரத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.
இதேபோல், வேலூர் பெண்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினியின் உடல்நிலையையும் சிறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே, சிறை விதிமுறையை மீறியதாக முருகன், நளினிக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அவர்களை உறவினர்கள் சந்திக்க செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்படவில்லை என்று சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.