தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம்: சட்ட மசோதா தாக்கல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வகைகளைப் பயன்படுத்தினால் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வகைகளைப் பயன்படுத்தினால் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான சட்ட மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிளாஸ்டிக் தாள், மேஜையில் விரிக்கப்படும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், பிளாஸ்டிக் இழை வருடப்பட்ட தட்டுகள், கப்புகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், கை பைகள், வாட்டர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தடை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்தாலும், தடையை மீறி பயன்படுத்துவோருக்கு விதிக்கப்பட வேண்டிய அபராதத் தொகைகள் இறுதி செய்யப்படாமல் இருந்தன. இந்த நிலையில், புதன்கிழமை நடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் அபராதத் தொகை தொடர்பான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான்கு வகை குற்றங்கள்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைப் பொருத்த வரையில் நான்கு வகைகள் குற்றமாகக் கருதப்படுகின்றன. அதன்படி, பயன்படுத்தப்பட்ட, தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்குகளை சேமித்தல், அவற்றை பிறருக்கு அளித்தல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்து அளித்தல் ஆகியன முதல் பிரிவு குற்றமாகும்.
இரண்டாவதாக, வணிக வளாகங்கள், துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட, தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துல் மற்றும் பகிர்ந்து அளிப்பது குற்றமாகும்.
மூன்றாவதாக, மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துவதும், பகிர்ந்து அளிப்பதும் குற்றமாகக் கருதப்படும். மேலும், சிறிய வணிக விற்பனையாளர்களால் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துவது நான்காவது வகைக் குற்றமாகக் கருதப்படும்.
இந்த குற்றச் செயல்களுக்கு கடந்த காலங்களில் ரூ.50 மற்றும் ரூ.10 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அபராதத் தொகையை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அபராதம் எவ்வளவு: முதல் வகை குற்றத்தை முதல் முறையாக செய்தால் ரூ.25 ஆயிரமும், இரண்டாவது முறையாகச் செய்தால் ரூ.50 ஆயிரமும், மூன்றாவது முறையாகச் செய்தால் ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.
இதேபோன்று, வணிக வளாகங்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தி இரண்டாவது வகை குற்றச் செயலில் முதல் முறையாக ஈடுபட்டால், ரூ.10 ஆயிரமும், இரண்டாவது முறை என்றால் ரூ.15 ஆயிரமும், மூன்றாம் முறை எனில் ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தி மூன்றாவது வகை குற்றச் செயலில் முதல் முறையாக ஈடுபட்டால் ரூ.ஆயிரமும், இரண்டாவது முறை எனில் ரூ.2 ஆயிரமும், மூன்றாவது முறை எனில் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
சிறிய வணிக விற்பனையாளர்களால் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தி நான்காவது வகை குற்றச் செயலில் முதல் முறையாக ஈடுபட்டால் ரூ.100-ம், இரண்டாவது முறை எனில் ரூ.200-ம், மூன்றாவது முறை என்றால் ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும்.
மூன்று முறைகளிலும் தவறிழைத்து அபராதம் செலுத்தி, நான்காவது முறையும் தவறு இழைத்தால் சம்பந்தப்பட்ட நபரின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.