தமிழ்நாடு

காஷ்மீர் தற்கொலைப்படை தாக்குதல்: திருமணமாகி ஓராண்டில் கயத்தாறு வீரர் மரணம்

DIN


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் சென்ற பேருந்து மீது வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் இறந்த வீரர்களில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியனும் ஒருவர் என தெரியவந்துள்ளது. 
கோவில்பட்டி வட்டம், கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி- மருதாத்தாள் தம்பதிக்கு 2 மகன்கள், 2  மகள்கள். இவர்களில், சுப்பிரமணியன் (28) கடைசிப் பிள்ளை. இவருக்கு கிருஷ்ணசாமி, பேச்சியம்மாள், வேலுத்தாய் என்ற சகோதர, சகோதரிகள் உள்ளனர். சுப்பிரமணியன், அதே ஊரின் தொடக்கப் பள்ளி, வில்லிசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரையும், பிறகு, கோவில்பட்டியில் ஐடிஐ-யும் முடித்துள்ளார். 
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆர்பிஎப்) சேர்ந்தார். பயிற்சிக்குப் பிறகு, உத்தரப்பிரதேசம், ஸ்ரீநகர் பகுதியில் பணியாற்றி வந்தார். இவருக்கும், இவரது ஊரைச் சேர்ந்த அரிச்சந்திரன் மகள் கிருஷ்ணவேணிக்கும் கடந்த 2017,  நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. 
ஜம்மு-காஷ்மீரில் இவர் பணியாற்றிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி சவலாப்பேரிக்கு வந்துவிட்டு, பிறகு பிப்ரவரி 10 ஆம் தேதி மீண்டும் இங்கிருந்து பணிக்கு புறப்பட்டுள்ளார். வியாழக்கிழமை (பிப். 14)  ஜம்முவை சென்றடைந்த சுப்பிரமணியன், செல்லிடப்பேசியில் மனைவி கிருஷ்ணவேணியிடம், தான் ஜம்முவுக்கு வந்துவிட்டதாகவும், வாகனத்தில் ஸ்ரீநகருக்குச் செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மாலை 4 மணியளவில், கிருஷ்ணவேணி அவரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டபோது அது செயலிழந்த நிலையில் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் சுப்பிரமணியன் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சவலாப்பேரி கிராமம் சோகத்தில் மூழ்கியது. அவர் படித்த தொடக்கப் பள்ளியில் மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். 
கயத்தாறு வட்டாட்சியர் லிங்கராஜ், வருவாய் ஆய்வாளர் அமுதா, டி.எஸ்.பி. ஜெபராஜ், ஆய்வாளர் ஆவுடையப்பன் ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று, சுப்பிரமணியன் மனைவி, பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். 
இதுகுறித்து சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி கூறியது: வியாழக்கிழமை (பிப். 14) மதியம் 2.15 மணிக்கு செல்லிடப்பேசியில் என்னிடம் பேசினார். அவரது, தந்தையை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு கூறினார். வாகனத்தில் செல்வதால் பிறகு பேசுவதாகக் கூறினார். பிறகு அவர் பேசவே இல்லை என்றார். 
சுப்பிரமணியன் தந்தை கணபதி கூறுகையில், என் மகன் அண்மையில் வந்திருந்தபோது, என்னை திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று கண் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். மீண்டும் பணிக்குத் திரும்பிய அவர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT