தமிழ்நாடு

தைலாபுரத்தில் முதல்வர், துணை முதல்வர்

DIN


திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விருந்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்தது. இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்திலுள்ள தனது வீட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை பாமக தலைவர் ராமதாஸ் விருந்துக்கு அழைத்தார்.
இதில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திண்டிவனத்துக்கு வந்தார். அதேபோல, மதுரையிலிருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திண்டிவனத்துக்கு வந்தார். பின்னர், இருவரும் தைலாபுரத்துக்குச் சென்றனர். 
அவர்களுடன் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், தங்கமணி, வேலுமணி, எம்.பி.க்கள் இரா.லட்சுமணன், ராஜேந்திரன், ஏழுமலை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் குமரகுரு, சக்கரபாணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் வந்தனர்.
    இவர்களை, பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி, கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகளுக்கு விருந்து வழங்கி ராமதாஸ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உபசரித்தனர். 
பலமான கூட்டணி-முதல்வர்: முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திண்டிவனம் நகர எல்லையில் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், உயர் கல்வித் துறை  அமைச்சர் கே.பி.அன்பழகன், அதிமுக மாநில அமைப்புச் செயலர் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் மோகன், எம்.பி.க்கள் ஏழுமலை, ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் குமரகுரு, சக்கரபாணி, முன்னாள் எம்எல்ஏ ஜானகிராமன், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் முரளி (எ) ரகுராமன், நகர்மன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் முகமது ஹரிப் மற்றும் ஏராளமான தொண்டர்கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். 
பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி, தொண்டர்கள் மத்தியில் முதல்வர் பேசியதாவது: மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ளது. அதிமுக தலைமையில் பாஜக, பாமக, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மகா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம்.
அதிமுக வேட்பாளர்கள் உள்பட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் இது நமக்கு முக்கிய தேர்தலாகும். அதிமுக கூட்டணி பலமான கூட்டணி என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
முன்னதாக, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே முதல்வருக்கு லட்சுமணன் எம்.பி. தலைமையில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
முதல்வரின் வருகையையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் திண்டினம் முதல் தைலாபுரம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

SCROLL FOR NEXT