தமிழ்நாடு

எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த நாணயம் வெளியீடு

DIN


எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயத்தை முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டார். இந்த நாணயத்தை துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடைபெற்றது. 
அதிமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த தின விழா தமிழகம் முழுவதும் அந்தக் கட்சியினரால் வியாழக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலைக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாணயம் வெளியீடு: இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அரசு சார்பில் நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய், 100 ரூபாய் சிறப்பு நாணயங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். 
இந்த நாணயங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். 
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் கே.ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நாணயத்தின் இரு பக்கங்கள்: நாணயத்தின் ஒருபுறத்தில் அசோக சக்கரமும், இந்தியா என இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. 
5 மற்றும் 100 என்ற எண்கள் அசோக சக்கரத்தின் கீழ்பகுதியில் உள்ளன. நாணயத்தின் பின்புறத்தில் தொப்பி, கண்ணாடியுடன் சிரித்த முகத்துடன் இருக்கும் எம்.ஜி.ஆர்., உருவப் படத்துடன் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா என தமிழிலும், ஹிந்தியிலும் அச்சிடப்பட்டு, 1917-2017 என்ற ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT