தமிழ்நாடு

18 தொகுதிகளில் தேர்தல் எப்போது? : தேர்தல் ஆணையம் பதில்

DIN

காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த ஏப். 24 வரை காலஅவகாசம் உள்ளது. அதற்குள்ளாக தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செவ்வாய்க்கிழமை பதில் மனுதாக்கல் செய்தது.
திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: 
பல்வேறு அரசியல் காரணங்களால் 18 எம்.எல்.ஏ.க்களை தமிழக பேரவைத் தலைவர் தகுதியிழப்பு செய்தார். இதற்கு எதிராக 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில்லை என 18 எம்.எல்.ஏ. க்களும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த 18 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய இயலாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 
அதில், ஜன. 8இல் தமிழக தலைமைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, இந்த இடைத்தேர்தல்களையும் நடத்தலாம் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அதோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் உள்ளது. மேலும், 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த 2019, ஏப்ரல் 24 வரை கால அவகாசம் உள்ளது. அதற்குள் தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT