தமிழ்நாடு

பொதுச் சின்னம் கிடைப்பதற்காகக் காத்திருக்கிறோம்: தேர்தலில் போட்டியிடாதது குறித்து டி.டி.வி. தினகரன் பேட்டி

தினமணி

தொகுதிக்கு ஒரு சின்னத்தில் போட்டியிட்டு மக்களைக் குழப்ப வேண்டாம் என்பதற்காகவே வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை; பொதுச் சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறோம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
 விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் மதுரையில் தனியார் விடுதியில்  வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இப்பணிகள் முடிந்துவிடும் என நம்புகிறோம். அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
அமமுக நீர்த்துப் போய்விட்டது எனப் பொதுமக்களிடையே ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதை முறியடித்து வெற்றி பெறுவோம். தவறானவர்களின் கையில் இருக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயக்கமான அதிமுகவை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதமாக அமமுகவை உருவாக்கி வருகிறோம்.  
தேர்தல் தோல்வியால்  வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருக்கிறார். அவரது  சொந்த ஊரில் வீடு  அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்  என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிப் பதிவு செய்யப்பட்ட பிறகு, அமமுக-வுக்கென தனிச் சின்னம் கிடைக்கும். அதற்கு முன்பு தொகுதிக்கு ஒரு சின்னத்தில் போட்டியிட்டு மக்களைக் குழப்ப வேண்டாம் என்பதற்காகவே வேலூர் மக்களவை மற்றும் இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தவிர்த்துள்ளோம்.
 கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ள கருத்துக்கள் சரியானது தான். அதை ஆதரிக்கிறேன். நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் புதிய மசோதாக்கள் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது தமிழக மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றுவதாக இருக்கிறது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினோ, நீட்' தேர்வு ஆகியவற்றில் மத்திய அரசுக்கு ஆதரவான போக்கை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது.
 எங்களது கட்சியினரைக் குழப்பி, பதவி, பணி ஒப்பந்தங்கள் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ஆள்பிடிக்கின்றனர். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை முன்கூட்டியே வெளியே எடுப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT