தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
 மக்களவைத் தேர்தலையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த ஆண்டில் வழக்கத்தை விட முன்னதாகவே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாமல்லபுரத்தில் கடந்த மாத கடைசி வாரம் முதலே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெயிலின் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் அக்னிநட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையிலும் தொடர்ந்து வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
 ஜூன் 3-இல் கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமையுடன் விடுமுறை முடிந்து திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதால் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் குடும்பங்களுடன் வந்து மாமல்லபுரத்தை சுற்றிப் பார்த்தனர்.
 கோடை விடுமுறைக் காலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் கூடுதல் எண்ணிக்கையில் வந்திருந்தனர். கோடை விடுமுறையின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக அதிகமாக இருந்தது. இதனால் சிறு வியாபாரிகளுக்கு அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்றது.
 சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கோவர்த்தன மண்டபம், வராக மண்டபம், ஆமை மண்டபம், வெண்ணெய் உருண்டைப்பாறை, பழங்கால கலங்கரை விளக்கம் மற்றும் நவீன கலங்கரை விளக்கம், கடற்கரைக் கோயில் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தனர். வெயிலில் சோர்ந்து போன சுற்றுலாப் பயணிகள் வெயிலின் வெப்பத்தைத் தணிக்க கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
 கடலில் அலைகளின் சீற்றம் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. ராட்சத அலைகள் 9 அடிக்கும் மேல் எழுந்து அச்சுறுத்தும் வகையில் காணப்பட்டன. கடற்கரையில் இருந்த காவலர்களும், கடலோரக் காவல்படையினரும் கடலில் குளித்தவர்களுக்கு கடலின் ஆழம் குறித்து விளக்கினர். கடலில் வெகுதூரம் செல்ல வேண்டாம் என எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க பார்வையாளர் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் தொல்லியல் துறைக்கு அதிக வருமானம் கிடைத்தது.
 எனவே சுற்றுலாப் பயணிகள் வெயில் நேரத்தில் ஓய்வெடுக்க தங்கும் மண்டபங்களை அமைக்கவும், நிழல் தரும் மரங்களை வளர்க்கவும் தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT