தமிழ்நாடு

வழக்கு விசாரணையில் நளினி ஆஜராவதில் என்ன சிக்கல்?உயர்நீதிமன்றம் கேள்வி

DIN


 பரோல் கோரிய வழக்கு விசாரணையின்போது நளினி நேரில் ஆஜராவதில் என்ன பாதுகாப்புச் சிக்கல் உள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், எனது மகளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எனவே எனக்கு 6 மாத பரோல் வழங்க வேண்டும் என சிறைத்துறைக்கு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோரிக்கை மனு அளித்தேன். அந்த மனுவை சிறைத் துறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை. மேலும் எனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 2000-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழக அரசு 3,700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. ஆனால் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வரும் என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. ஆயுள்தண்டனை கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருமாத காலம் பரோல் வழங்க சிறைவிதிகள் உள்ளன. எனவே எனது மகளின் திருமணத்துக்காக 6 மாத காலம் பரோல் வழங்க வேண்டும். இந்த வழக்கில் நானே ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், நளினி  தன்னுடைய மகளின் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே அவரை இந்த வழக்கில் ஆஜராகி வாதிட அனுமதிக்கக் கூடாது. மேலும் அவரை நேரில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல் உள்ளது எனத் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், வழக்கில் ஆஜராகி வாதிட நளினிக்கு சட்டப்படி முழு உரிமை உள்ளது. அந்த உரிமையை வழங்க மறுக்க முடியாது. தேவைப்பட்டால் வழக்கை விசாரிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யலாம். நளினி உயர்நீதிமன்றத்தில் ஆஜராவதில் என்ன பாதுகாப்புச் சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பினர். பின்னர், இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT