தமிழ்நாடு

ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா: ஏழைகளின் ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

து. ரமேஷ்



ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 வேலூர் மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாத்தலம் ஏலகிரி மலை. மொத்தப் பரப்பளவு சுமார் 30 சதுர கிலோ மீட்டர் மட்டுமே. கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகபட்சம் 29 டிகிரி சென்டிகிரேடாகவும் குளிர்காலத்தில் 11 டிகிரி சென்டி கிரேடாகவும் இருக்கிறது. ஏலகிரி மலைக்கு பெயர்க் காரணம் பல்வேறு விதமாகக் கூறப்பட்டாலும், பழங்காலத்தில் இங்கு ஏலக்காய் அதிகமாக விளைந்ததால் இப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏலகிரி மலையை தமிழக அரசு கடந்த 1984-85-இல் சுற்றுலாத் தலமாக அறிவித்தது. கடல் மட்டத்திலிருந்து 1,048.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏலகிரிக்கு ஏழைகளின் ஊட்டி  என்ற பெயரும் உண்டு. 

ஜோலார்பேட்டையில் இருந்து ஏலகிரி மலைக்குச் செல்வதற்காக 14 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய சாலை அமைக்கும் பணி கடந்த 1960-ஆம் ஆண்டு தொடங்கி 1964-ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. இந்த வளைவுகள் ஒவ்வொன்றுக்கும்  பாவேந்தர் வளைவு,  பாரதியார் வளைவு,  திருவள்ளுவர் வளைவு,  இளங்கோ வளைவு, கம்பர் வளைவு,  கபிலர் வளைவு,  ஒளவையார் வளைவு,  பாரி வளைவு,  காரி வளைவு,  ஓரி வளைவு,  ஆய் வளைவு, அதியமான் வளைவு,  நள்ளி வளைவு,  பேகன் வளைவு ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

  இங்கு அனைத்து அரசு விடுமுறைகள், மாத மற்றும் வார விடுமுறை நாள்கள் என ஆண்டிற்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருகையால் இங்குள்ள உணவங்கள், விடுதிகளுக்கு வருவாய் கிடைக்கிறது. 

ஏலகிரி மலை ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. இங்கு, முத்தனூர், கொட்டையூர், புங்கனூர், அத்தனாவூர், கோட்டூர், பள்ளக்கனியூர், மேட்டுக்கனியூர், நிலாவூர், ராயனேரி பாடுவானூர், புத்தூர், தாயலூர், மங்களம், மஞ்சங்கொல்லிபுத்தூர் என 14 குக்கிராமங்கள் உள்ளன.  கிடைக்கும் தேன், நெல்லிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் விற்பனைக்கும் கிடைக்கின்றன.

சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் அடிக்கடி தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் முகாம்கள் என தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வந்து செல்கின்றனர். 

இது போன்றவர்கள் தொடர்ந்து வந்து செல்வதற்காக தாவரவியல் பூங்காவை அனைவரையும் கவரும் வகையில் அமைத்து, மலையேற்றப் பயிற்சிக்கும் அரசு அனுமதித்தால் ஏலகிரியின் புகழ் மேலும் கூடும். அரசுக்கும் வருமானம் அதிகரிக்கும்.  பல்வேறு மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு வேலை வாய்ப்பும் கூடும். முடிவு அரசின் கையில்...

கிடப்பில் தாவரவியல் பூங்கா பணிகள்
ஏலகிரியில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக அத்தனாவூரில் கடந்த 2010-ஆம் ஆண்டு 81.45 ஏக்கர் நிலம் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைக்கு நிலமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பூங்காவை அமைக்க ரூ.20 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

 இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜிடம் கேட்டதற்கு, திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியளித்தால் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கு ஏலகிரி மலையில் புங்கனூரில் உள்ள செயற்கை ஏரி,  படகுச் சவாரி,  செயற்கை வண்ண நீரூற்று,  சிறுவர் பூங்கா, தனியார் பொழுதுபோக்குப் பூங்காவில் சாகச விளையாட்டுகள் என சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. ஆனால் இப்பொழுது போக்கு அம்சங்கள் பெரும்பாலும் கோடை காலத்தில்தான் கண்டுகளிக்கும்படியாக உள்ளது. பிற நாள்களில் வரும் குறைவான சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது பொதுவாக இங்கு அடிக்கடி எதிரொலிக்கும் குற்றச்சாட்டு.

வேறு பயன்பாட்டுக்கு இடம்
ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவற்றை அகற்றுவதில் இருந்த பிரச்னையால் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் ஏற்கெனவே போடப்பட்ட திட்ட மதிப்பீடு காலாவதியாகிவிட்டது. பூங்கா அமைக்க இருந்த இடத்தையும் இப்போது வேறு பயன்பாட்டுக்கு  அரசுத்துறையினர் கேட்டு வருகின்றனர். தாவரவியல் பூங்கா அமைக்க அரசு அனுமதித்தால் புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்தாக வேண்டும் என்றார் வேலூர்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT