தமிழ்நாடு

பயணிகள் வழித்தடத்தில் கூடுதல் சரக்கு ரயில்கள்

DIN


திருச்சி:  வருவாய் குறைவை காரணம் காட்டி, பயணிகள் ரயில்களை ரத்து செய்துவிட்டு, வணிக நோக்குடன், அதே தடங்களில், கூடுதலாக சரக்கு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதால் பயணிகள் சேவை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய துறை என்ற பெயரை பெற்றுள்ள இந்திய ரயில்வே துறை, பெரும்பாலும் சேவைத் துறையாகவே விளங்கி வருகிறது.   ரயில்களில் குறைந்த கட்டணம், எளிதான பயணம்,  அதிக வசதிகள் போன்ற காரணங்களால் நாள்தோறும் சுமார் 2.30 கோடி பேர் ரயில்களில்  பயணித்து வருகின்றனர்.  
திருச்சி ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில்  ஜனவரி மாதம் வரை மொத்தம் ரூ. 759.1 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில், சரக்குப் போக்குவரத்தில் ரூ. 411.65 கோடியும், பயணிகள் போக்குவரத்தில் ரூ. 301.58 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது. சுமார் 7.02 மெட்ரிக் டன் சரக்கு கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது, 8.55 மெட்ரிக் டன் கையாளப்பட்டுள்ளதாக  தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷிரேஸ்டா தெரிவித்துள்ளார்.  
இந்நிலையில், சரக்குப் போக்குவரத்தில் வருவாயை மேலும் அதிகரிக்க முடிவு செய்த ரயில்வே நிர்வாகம்,  பயணிகள் ரயில்களுக்கு அளித்து வந்த முக்கியத்துவத்தை குறைத்து, சரக்கு ரயில்களை  இயக்கும் முடிவு, பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மிஷன் ரப்தர் என்ற பெயரில் தனியாக நேரம் ஒதுக்கி  சரக்கு ரயில்களை இயக்க ரயில்வே முயற்சித்து வருகிறது. சரக்குப்போக்குவரத்து அதிகம் நடைபெறும் மார்க்கங்களை தேர்வு செய்து பயணிகள்  ரயில்கள் நிறுத்தப்படும் அல்லது நேரம் மாற்றப்படும்.  இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வடமாநிலங்களில் மேற்கொண்ட சோதனை வெற்றியைத் தந்துள்ளதால் இந்த நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. 
குறிப்பாக, திருச்சி கோட்டத்தில், காரைக்குடி - பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் (06856-06855) பிப்ரவரி 15 முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை 40 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த ரயில் பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக, இருமுறை இதேபோல ரத்து செய்யப்பட்டது. 
அதைப்போல, திருச்சி-தஞ்சை-திருச்சி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் (76820-76823) மற்றும் மயிலாடுதுறை - திருச்சி பயணிகள் ரயில்களும், திருநெல்வேலி - மயிலாடுதுறை - திருநெல்வேலி  பயணிகள் ரயில் (56821-56822) ஆகியவையும் இதே தேதிகளில் திருச்சி - மயிலாடுதுறை இடையிலும், மேலும் திருச்சி -நாகர்கோவில் பயணிகள் ரயில், திருச்சி காரைக்கால் இடையே பிப்ரவரி 20 முதல் மார்ச் 31 வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக   ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில் பயணிகள் நலச் சங்க நிர்வாகி சண்முகவேலு கூறியது: பயணிகள் ரயில்களுக்குப் பதிலாக சரக்கு ரயில்களை இயக்கும் ரயில்வே நிர்வாகம், பயணிகளின் ரயில்கள் தேவையை உணர்வதில்லை. பயணிகள் நலனிலும் அக்கறை கொள்வதில்லை. இத்தகைய நடவடிக்கை ரயில்வே சேவைத்துறை என்பதை மறந்து வணிக நோக்குடன் செயல்படுவதை காட்டுகிறது. ரயில்வே என்பது சேவைத்துறை என்பதை உணரவேண்டும். 
எஸ்.ஆர்.எம்.யூ. துணைப் பொதுச் செயலர் மற்றும் கோட்டச் செயலர் எஸ். வீரசேகரன் : ரயில்கள் இயக்கத்துக்கு ரயில் சேவை என்றுதான் பெயர். கடந்த காலம் முதலே ரயில்வே துறை சேவைத் துறையாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் அண்மைக்காலமாக அது வணிகத்துறையாக மாறி வருகிறது. தொழிலாளர்களைப் பற்றியோ, பயணிகள் நலன் குறித்தோ ரயில்வே அமைச்சகம் மற்றும் வாரியம் ஆகியவை கவலை கொள்வதில்லை. மாறாக வணிக நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகிறது.  தொழிலாளர் பிரிவில் இது குறித்து புகார் அளிக்கப்படவுள்ளது. 
தட்சிண ரயில்வே துணைப் பொதுச் செயலர் மனோகரன்:  பயணிகள் ரயில் போக்குவரத்தையும் பாதிக்கும் வகையில், ரயில்வே துறை சரக்கு ரயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மிஷன் ரப்தர் என்ற பெயரிலான சரக்குப்போக்குவரத்து நேரம் என புதிய நேரத்தை அறிமுகம் செய்துள்ளது, பயணிகள் ரயில் போக்குவரத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வழி வகுக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT