தமிழ்நாடு

பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: வி.ஐ.டி. வேந்தர் வலியுறுத்தல்

DIN

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தினார். 
சட்டக்கதிர் தமிழ் சட்ட இதழ் மற்றும் தமிழ்நாடு மகளிர் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில், மகளிர் தின கொண்டாட்டம் மற்றும் கருத்தரங்கம் சென்னை தியாகராய நகரில்  சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு  பெண் வழக்குரைஞர்கள் கூட்டமைப்புத் தலைவர் கே.சாந்தகுமாரி தலைமை வகித்தார். 
இந்நிகழ்ச்சியை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தொடங்கி வைத்துப் பேசியது: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடுக்காக இன்னும் போராடி வருகிறோம். இதுகட்டாயம் அடைந்தே தீரவேண்டிய நிகழ்வு. மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடும்போது, பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். ஆனால், அது கிடைக்கவில்லை. எனவே, பெண்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கவேண்டும். பெண்களுக்கு  அதிகாரம் அளித்தல்  என்பது பழைய முறையில் சிந்திக்க முடியாது என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து, "பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளித்தல் '  என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியது: அதிகாரம் வேண்டும் என்றால் கல்வி வேண்டும்.  இப்போது பள்ளிக் கல்விக்கு பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன. ஆனால், உயர்கல்விக்கு யாரும் உதவி செய்வது இல்லை. 40 நாடுகளில் இலவச உயர்கல்வி வழங்கப்படுகிறது.
ஆனால், நமது நாட்டில் அந்த நிலை இல்லை. அது மாற வேண்டும். முழுமையாக அதை செயல்படுத்த இயலவில்லை என்றாலும், முதலில் பெண்களுக்காவது இலவச உயர்கல்வி கொடுக்க வேண்டும். 
பெண்களுக்கு 3-இல் ஒரு பங்கு இடஒதுக்கீடு  கோரி 1996-இல் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அதுதொடர்பான மசோதா 2010-இல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா  மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எல்லா கட்சிகளும் ஆதரவு அளிக்காததால், அந்த மசோதா நிறைவேறவில்லை. 2014-இல் அந்த மசோதா காலாவதியாகிவிட்டது. அடுத்த 5 ஆண்டில் திருப்பி கொண்டு வரவில்லை. அதற்கு பெண்களும் பெரிய அளவில் போராட்டம் நடத்தவில்லை. அடுத்து வருகின்ற நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான  33 சதவீத இடஒதுக்கீடு  மசோதாவை  நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.    இதைத்தொடர்ந்து, "பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள், அதை எதிர்நோக்குதல் '  என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, இந்திய சைபர் சமூகத்தின் தலைவர் பாலுசுவாமிநாதன், சைபர் பாதுகாப்பு ஆலோசகர் நாகராஜன் சுப்பு ஆகியோர் பேசினர். 
இந்த நிகழ்ச்சியில்,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, மூத்த வழக்குரைஞர் ஆர்.விடுதலை, இந்திரா தங்கபாலு, கவிஞர் சல்மா உள்பட பலர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT