சத்தியமங்கலம், பொள்ளாச்சி பகுதிகளில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண், முதியவர் உயிரிழப்பு
சத்தியமங்கலம், பொள்ளாச்சி அருகே காட்டு யானைகள் தாக்கியதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண், முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
சத்தியமங்கலம், பொள்ளாச்சி அருகே காட்டு யானைகள் தாக்கியதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண், முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், தாளவாடி மலைப் பகுதி, வடக்குப்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் பண்ணாரி மனைவி பார்வதி (50). இவர் கடந்த சில ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் சுற்றித் திரிந்தார்.
இந்நிலையில் தாளவாடி மலைப் பகுதி, கும்டாபுரம் கிராமம் அருகே வனச் சாலையில் பார்வதி ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டு யானை பார்வதியை துரத்திப் பிடித்து தும்பிக்கையால் தூக்கி வீசியதுடன் காலால் மிதித்ததாம். இதில் பார்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பார்வதியின் சடலத்தைப்பார்த்த அந்த வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் வனத் துறையினர் அங்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தாளவாடி வனத் துறையினர், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் பலி: கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தில் அமைந்துள்ளது நவமலை வனப் பகுதி. இங்கு மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
நவமலை அடர்ந்த வனப் பகுதிக்குள் இருப்பதாலும், ஆழியாறு அணையை ஒட்டி இருப்பதாலும் யானைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அந்தப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், வேட்டைத் தடுப்புக் காவலர் ராஜு (எ) முருகனின் மகள் ரஞ்சனா (எ) ரஞ்சனி (7) காட்டு யானை தாக்கியதில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சிறுமியைத் தாக்கி கொன்ற யானையை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில், அதே யானை, நவமலை பகுதிக்கு மீண்டும் சனிக்கிழமை வந்துள்ளது. இதையடுத்து, யானையை வேறு பகுதிக்கு விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குடியிருப்பு அருகே நின்று கொண்டிருந்த மாகாளி (65) என்பவரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து ஆழியாறு போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த மாகாளிக்கு மனைவி ஏசம்மாள், மகள் சத்யபிரியா ஆகியோர் உள்ளனர்.
இது குறித்து ஆழியாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு நாள்களில் அடுத்தடுத்து யானை தாக்கி, இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.