300-க்கும் மேற்பட்ட பூத்துகளில் ஒரு வாக்குகூட பதிவாகாதது எப்படி?
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 300-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் அமமுகவுக்கு ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. அப்படியெனில், அந்த பூத்துகளில் இருந்த அமமுக வாக்குச்சாவடி முகவர்களின் வாக்குகள்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 300-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் அமமுகவுக்கு ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. அப்படியெனில், அந்த பூத்துகளில் இருந்த அமமுக வாக்குச்சாவடி முகவர்களின் வாக்குகள் எங்கே சென்றன என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைகளுக்கான இடைத் தேர்தலில் அமமுக கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியைச் சந்தித்தது. பல இடங்களில் 4-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் முடிவு தொடர்பாக டிடிவி தினகரன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் அமமுகவுக்கு மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.
வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. அமமுகவுக்கான செல்வாக்கு போக போகத் தெரியும். இந்தத் தேர்தலில் 300-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் பூஜ்யம் காட்டியுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்சிக்கு 4 முகவர்கள் வரை இருந்தனர். அவர்கள் அளித்த வாக்குகள் எங்கே சென்றது?
நான் வசிக்கும் இடத்தில்கூட அமமுகவுக்கு 14 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. அதுபோல, திமுக வெற்றிபெற்ற மக்களவைத் தொகுதிகளில் இடம்பெற்றிருக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இது எப்படி சாத்தியமானது?
பதிவாகாத விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு கூட செல்ல முடியாது. தேர்தல் ஆணையம் உரிய பதிலை அளிக்கவேண்டும். திமுகவுக்குச் சென்று செந்தில் பாலாஜி வெற்றி பெற்றது அவரது புத்திசாலித்தனமாக இருக்கலாம். கட்சியிலிருந்து 10 பேர் விலகியதால் அமமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மேலும் விலக விரும்புபவர்கள் தாராளமாக விலகிக்கொள்ளலாம்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். எங்களுடைய "ஸ்லீப்பர் செல்'கள் யார் என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தெரியும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.