தமிழ்நாடு

கோவை அருகே 3 வயது பெண் குழந்தை கொலை: தாயார் கைது: தலைமறைவான நபரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

தினமணி

கோவை அருகே 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய நபரைப் பிடிக்க மூன்று தனிப் படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.   

கோவை, சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் முருகன் கோயிலை ஒட்டிய மலைப் பாதையில் உள்ள முள்புதருக்குள் குழந்தையின் சடலம் கிடப்பதாக சரவணம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர், தனது குழந்தையைக் காணவில்லை எனக்கூறி 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார், அப்பகுதியில் குழந்தையைத் தேடிக்கொண்டிருந்த பெண்ணை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்த சிறுமியின் உடலைப் பார்த்த அவர், அது தனது குழந்தைதான் என்பதை உறுதி செய்தார்.  இதைத் தொடர்ந்து போலீஸார் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் காரமடை அருகேயுள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரூபினி (30) என்பதும்,  உயிரிழந்த அவரது மகள் தேவிஸ்ரீ(3) என்பதும் தெரியவந்தது. ரூபினிக்கும் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்துள்ளனர்.  பின்னர் ரூபினி தனது குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மேலும், போலீஸார் ரூபினியிடம் நடத்திய தொடர் விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு ரூபினியின் செல்லிடப்பேசிக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்ததாகவும், அதில் தமிழ்ச்செல்வன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் நட்பாகப் பேசியதாகவும் கூறியுள்ளார். மேலும், சில நாள்களுக்கு முன்பு அந்த நபர், ரூபினியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறினாராம்.  இதை நம்பிய ரூபினி தனது குழந்தையுடன் சரவணம்பட்டி வந்துள்ளார். அங்கு விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.  பின்னர் புதிய வீடு பார்க்கும் வரை குழந்தை தனது உறவினர் வீட்டில் இருக்கட்டும் என தமிழ்ச்செல்வன் கூறியதாகவும், இதனால் குழந்தையை அவருடன் அனுப்பியதாகவும் போலீஸாரிடம் ரூபினி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியத் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தீவிரமாக நடத்தினர்.  இதில், தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து குழந்தைக்கு பிஸ்கட்டில் விஷம் வைத்து கொலை செய்ததாக ரூபினி தெரிவித்துள்ளார். கோவில்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உதவியாளராகப் பணியாற்றி வருவதும், அவ்வப்போது வெள்ளியங்காடு வந்த அவருக்கு ரூபினியுடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது. தங்களது உறவுக்கு குழந்தை இடையூறாக இருக்கக்கூடாது எனக் கருதிய இருவரும் குழந்தையைக் கொலை செய்து சடலத்தை வீசிவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து ரூபினியை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தமிழ்ச்செல்வனைக் கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT