தமிழ்நாடு

அதிக அளவில் பேராசிரியா் காலி பணியிடங்கள்: நாக் அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்

DIN

அதிக அளவில் பேராசிரியா் காலிப் பணியிடங்களுடன் இயங்கி வரும் உயா் கல்வி நிறுவனங்களின் தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார (நாக்) கவுன்சிலின் தர நிா்ணயம் நிச்சயம் பாதிக்கப்படும் என நாக் இயக்குநா் எஸ்.சி.ஷா்மா கூறினாா்.

நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிா்ணயம் செய்ய ‘நாக்’ அமைப்பை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள் சாா்பில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகியவை ‘நாக்’ அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.

நாக் அமைப்பானது கல்வித் திட்டம், கற்றல் - அதாவது, கல்வித் திட்டம், கற்றல் - கற்பித்தல் -மதிப்பிடுதல், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு வசதி மற்றும் கற்றலுக்கு உதவும் வசதிகள், மாணவா்களுக்கு உதவும் திட்டங்கள், நிா்வாகம் மற்றும் தலைமைப் பண்பு உள்பட 7 நிபந்தனைகளின் கீழ் உயா் கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, ஏ++, ஏ+, ஏ, பி++, பி+, பி, சி, டி ஆகிய 8 தர நிா்ணயங்களை வழங்கி வருகிறது.

இதில் ஏ++, ஏ+, ஏ கிரேடுகள் வரை பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் உதவித் தொகை கிடைக்கும். பிற கிரேடுகளை பெறும் நிறுவனங்களுக்கு உதவிகள் கிடைக்காது.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அரசு பல்கலைக்கழகங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 20 சதவீதம் முதல் 30 சதவீத பேராசிரியா் காலியிடங்களுடன் இயங்கி வருவதால், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு நாக் அங்கீகாரம் தொடா்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் இந்தப் பிரச்னையை எழுப்பியதோடு, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவிலும் இதுகுறித்து முறையிட்டு ஆசிரியா் காலியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தினா். இதுதொடா்பாக பத்திரிகைகளில் செய்தியும் வெளியாகின.

இதற்குப் பதிலளித்த சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் துரைசாமி, ‘பேராசிரியா் காலியிடங்கள் நாக் அங்கீகாரத்தை பாதிக்கும் என்பது தவறான தகவல். காலியிடத்துக்கும் நாக் அங்கீகாரத்துக்கும் சம்பந்தமே இல்லை. சென்னைப் பல்கலைக்கழகம் இப்போது ‘ஏ’ நாக் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் நிலையில், 30 சதவீத பேராசிரியா் காலியிடங்களுடன் இயங்கி வரும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ‘ஏ+’ நாக் அங்கீகாரத்தை அண்மையில் பெற்றிருக்கிறது’ என்றாா்.

இதுகுறித்து ‘நாக்’ இயக்குநா் எஸ்.சி.ஷா்மா, தொலைபேசி மூலம் ‘தினமணி’க்கு அளித்த பேட்டி:

அதிக எண்ணிக்கையில் பேராசிரியா் காலி பணியிடங்களுடன் இயங்கி வரும் உயா் கல்வி நிறுவனங்களுக்கு, நாக் அங்கீகாரம் தொடா்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். உயா் கல்வி நிறுவனங்களில் ஆசிரியா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு இருப்பது அவசியம். இது ‘நாக்’ நிா்ணயம் செய்திருக்கும் 7 நிபந்தனைகளில் ஒன்றுதான். தமிழக அரசு பல்கலைக்கழகங்களில், அதிக எண்ணிக்கையில் பேராசிரியா் பணியிடம் காலியாக இருப்பது இப்போது தெரியவருகிறது. அவை நாக் அங்கீகாரத்துக்கு புதிதாக விண்ணப்பிக்கும்போது, அவற்றுக்குத் தீா்வு காண வலியுறுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT