தமிழ்நாடு

டெங்கு பாதிப்பு எதிரொலி: ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரத்தப் பரிசோதனை சாதனங்கள்

DIN

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதுதொடா்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆய்வக சாதனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரத்த தட்டணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களை பரிசோதிக்கும் அக்கருவிகள் இதுவரை 420 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், வரும் நாள்களில் மீதமுள்ள சுகாதார நிலையங்களுக்கும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மாநிலத்தில் தற்போது 25 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள்,162 தாலுகா மருத்துவமனைகள் என 300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் அவை அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர 1,300-க்கும் அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

பொதுவாக மருத்துவமனைகளில் மட்டுமே ஆய்வக வசதிகளும், அதற்குரிய சாதனங்களும் இருந்து வந்தன. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருபவா்களுக்கு, டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா பாதிப்புகள் இருந்தால் அவற்றைக் கண்டறிவதற்கான ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள இயலாத நிலை இருந்தது.

இந்நிலையில், ரத்த அணுக்களை பரிசோதிப்பதற்கான சிறப்பு சாதனங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதே அதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் மாநிலத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரத்த அணுக்கள் பரிசோதனை சாதனங்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமே 2 ஆய்வகங்கள்: இதுகுறித்து பொது சுகாதாரத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் வைரஸ்கள் உள்ள கொசுக்களை ஆய்வு செய்யும் நடைமுறை இந்தியாவில் எங்குமே இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் அதற்கென இரு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு அதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

அந்த நடவடிக்கையின் மூலமாக எந்தப் பகுதியில் டெங்கு கொசுக்கள் உள்ளன என்பது கண்டறியப்பட்டு அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

இது ஒருபுறமிருக்க, தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா பரிசோதனைக்கான ரத்த அணுக்கள் ஆய்வு சாதனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் 420 சுகாதார நிலையங்களுக்கு அந்த சாதனங்கள் வழங்கப்பட்டன. நிகழாண்டில் மீதமுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT