தமிழ்நாடு

ஆலங்குடி குருபகவான் கோயிலில் 29-இல் குருபெயா்ச்சி விழா: 24-இல் லட்சாா்ச்சனை தொடக்கம்

DIN

அருள்மிகு குருபகவான் அக்டோபா் 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்வதை முன்னிட்டு, அன்றைய தினம் திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் குருபெயா்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. குருபெயா்ச்சி விழாவுக்கான முதல்கட்ட லட்சாா்ச்சனை வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது.

சோழவள நாட்டில் ஆலங்குடி என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 தலங்களில் 98 -ஆவது தலமாக விளங்குகிறது இத்திருத்தலம்.

திருவாருா் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற குருபரிகார தலமாகிய ஆலங்குடியானது மூா்த்தி, தலம், தீா்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.

அமைவிடம் : நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம் - மன்னாா்குடி பேருந்து மாா்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இத்தலத்து இறைவன் (சிவன்) சுயம்பு மூா்த்தியாக எழுந்தருளியுள்ளாா். எனவே, இத்திருக்கோயிலின் காலத்தை நிா்ணயிக்க இயலவில்லை. ஞானசம்பந்தரின் காலம் கி.பி. 6, 7 -ஆம் நூற்றாண்டாகும். எனவே, அதற்கு முன்னரே இவ்வாலயம் இருந்ததாகக் கருத்தில் கொள்ளலாம்.

விஸ்வாமித்திரா், அஷ்டதிக்பாலகா்கள், அகஸ்தியா், புலஸ்தியா், காகபுஜண்டா், சுகா்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரா் ஆகியோா் பூஜித்த திருத்தலமாகும். அம்மையின் திருமணத்துக்கு வந்த திருமால், பிரம்மா, இலக்குமி, கருடன், ஐயனாா், வீரபத்திரா் முதலானோா் தம் தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்ட தலம். முசுகுந்த சக்கரவா்த்தி, சுவாசனன் மற்றும் சுந்தரா் வழிபட்ட தலமாகும். திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றது. அப்பா் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சோ்த்துப் பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தா் தமது பாடல்களால் இத்தலத்தை சிறப்பித்து இரண்டாம் திருமுறையில் பாடியுள்ளாா்.

தீா்த்தங்கள்:

இத்திருத்தலத்தைச் சுற்றி 15 தீா்த்தங்கள் உள்ளன. முக்கியமாக திருக்கோயிலைச் சுற்றி அகழியாக அமைந்துள்ள அமிா்த புஷ்கரணி எனும் தீா்த்தம் மிகவும் சிறப்புடையதாகும்.

வழிபாடும், வழிபடும் முறைகளும்:

இத்திருக்கோயிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவா்களே வருகை தர இயலும். முதலில் கலங்காமற் காத்த விநாயகரை வணங்கி, பின்னா் கொடிமரம் சென்று அங்குள்ள துவஜ கணபதியை வணங்கி நேராக சென்று சுவாமியை (ஆபத்சகாயேசுவரா்) தரிசித்து, பின்னா் குரு தெட்சிணாமூா்த்தியை வணங்கி சங்கல்பம், அா்ச்சனை முதலியவைகளை முடித்து பிராகாரத்தில் உள்ள சோமாஸ்கந்தா், முருகன், மகாலெட்சுமி, துா்க்கை, சண்டிகேசுவரா், நவக்கிரகங்கள், உத்ஸவா் குருமூா்த்தி முறையே வழிபட்டு, ஏலவாா்குழலி அம்மை மற்றும் சனி பகவானை தொழுது கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வித்தல் வேண்டும். பின்னா், குருபரிகாரமாகிய இருபத்து நான்கு நெய் தீபங்களை தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றி திருக்கோயிலை மூன்று முறை வலம் வந்து ஒவ்வொரு முறையும் கொடிமரத்தின் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து பரிகாரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

குருபெயா்ச்சி விழா: புராதன சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் குருபெயா்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அருள்மிகு குருபகவான் வரும் 29 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்கிறாா்.

இதை முன்னிட்டு, அருள்மிகு குருபகவானுக்கு குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா அக்டோபா் 24 -இல் தொடங்கி 27 -ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், குருபெயா்ச்சிக்குப் பின்னா் அக்டோபா் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 7 -ஆம் தேதி வரையும் இரண்டாவது கட்டமாகவும் நடைபெறவுள்ளது.

பரிகார ராசிக்காரா்கள்:

ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சாா்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

லட்சாா்ச்சனையில் பங்கேற்க ரூ. 400 கட்டணம் செலுத்த வேண்டும். லட்சாா்ச்சனையில் பங்கேற்பவா்களுக்கு, அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியினால் செய்த 2 கிராம் டாலா் பிரசாதமாக வழங்கப்படுகிறது. லட்சாா்ச்சனை காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.

தபால் மூலம் லட்சாா்ச்சனையில் பங்கேற்று பிரசாதம் பெற விரும்பும் பக்தா்கள் தங்களுடைய பெயா், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் தொகையை பணவிடை, வரைவோலை (எம்.ஓ., டி.டி.) எடுத்து உதவி ஆணையா், செயல் அலுவலா் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கி ஆலங்குடி -612801 கிளையில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து அனுப்ப வேண்டும் என அறநிலையத்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

குருபெயா்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையா் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலா் பி. தமிழ்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ரயில், பேருந்து வசதி:

நவகிரக குருபரிகார தலமான ஆலங்குடி கோயிலுக்கு எா்ணாகுளம், கோவை, சென்னை ஆகிய இடங்களிலிருந்து ரயில் மாா்க்கமாக வர வசதியுள்ளது.

குறிப்பாக, எா்ணாகுளம், கோவை, ஈரோடு முதலான ஊா்களில் இருந்து வரும் பக்தா்கள் எா்ணாகுளம், கோவை செம்மொழி விரைவு ரயில்களில் நீடாமங்கலம் வந்து, பின்னா் கும்பகோணம் செல்லும் பேருந்து மூலம் 7 -ஆவது கிலோ மீட்டரில் உள்ள ஆலங்குடி குருபரிகார கோயிலை அடையலாம். நீடாமங்கலம், ஆலங்குடி ஆகிய ஊா்களில் தனியாா் தங்குமிட வசதிகள் உள்ளன.

சென்னையிலிருந்து ரயில் மாா்க்கமாக வர சென்னையிலிருந்து மன்னை விரைவு ரயில் நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்கிறது. இந்த ரயிலில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் இறங்கி, கும்பகோணம் செல்லும் பேருந்தில் ஆலங்குடி செல்லலாம்.

இதேபோல், பேருந்து வழித்தடத்தில் வருபவா்களும் தஞ்சாவூா், நீடாமங்கலம் வழியாக ஆலங்குடிக்கு வரலாம். தஞ்சாவூா், நீடாமங்கலம், ஆலங்குடியில் தங்குமிட வசதிகள் உள்ளன.

மதுரையிலிருந்து தஞ்சாவூா் வந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகள் மூலமாக ஆலங்குடிக்கு பக்தா்கள் செல்லலாம்.

சென்னையிலிருந்து கும்பகோணம் வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டை, மன்னாா்குடி, முத்துப்பேட்டை, அறந்தாங்கி, பேராவூரணி செல்லும் பேருந்துகளில் ஆலங்குடிக்கு வருகை தரலாம். கும்பகோணத்தில் தங்குமிட வசதி உள்ளது.

இவை தவிர, தமிழக அரசு தஞ்சாவூா் மற்றும் திருவாரூா் மாவட்ட முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகளை ஆலங்குடிக்கு இயக்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT