தமிழ்நாடு

71 லட்சம் மரக்கன்றுகள்: தமிழக அரசு ரூ.198 கோடி நிதி ஒதுக்கீடு

DIN


தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்துக்காக 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ரூ.198.57 கோடி நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதுகுறித்து, தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட உத்தரவு விவரம்:
ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் செயலாக்கத்துக்கு எடுக்கப்பட்டது. அதில், 63 லட்சம் மரக்கன்றுகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாகவும், ஏழு லட்சம் மரக்கன்றுகள் வனத்துறை வழியாகவும் செயல்படுத்தப்பட்டன.
இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உயரதிகாரிகளுடனான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நிகழ் நிதியாண்டில் 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவது என முடிவு செய்யப்பட்டது. அந்த 71 லட்சத்தில் 64 லட்சம் மரக்கன்றுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக நடவும், வனத்துறை வழியாக 7 லட்சம் கன்றுகளை நடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாகச் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வனத்துறை மூலமாக நடப்படவுள்ள 7 லட்சம் மரக்கன்றுகளுக்கான செலவினத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
கூலி எவ்வளவு: நிகழாண்டில் மொத்தமாக 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்காக ரூ.198.57 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், கூலிக்கான செலவினத் தொகை மட்டுமே ரூ.193.60 கோடியும், கருவிகளுக்கான வாடகை உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.4.97 கோடியும் செலவிடப்படும்.
இந்தத் திட்டத்தில் கூலித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.193.60 கோடியானது முற்றிலும் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். இதர செலவினத் தொகையில் 25 சதவீதத்தை மாநில அரசு ஏற்கும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்துவதன் மூலம் தொடர்ந்து பசுமைப் பரப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஊராட்சி நிலங்கள், அரசு நிலங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் இதர காலியிடங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரங்கள் தொடர்ந்து நடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT