வீரபாண்டி தற்காலிக காய்கனி கமிஷன் மண்டியில் திங்கள்கிழமை விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ள காய்கனிகள் 
தமிழ்நாடு

ஊரடங்கு: காய்கனி சாகுபடியில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு எதிரொலியாக காய்கனி சாகுபடியில்

கோ.ராஜன்

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு எதிரொலியாக காய்கனி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால், வரும் மாதங்களில் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் தக்காளி, கத்தரி, வெண்டை, சீனி அவரை, முட்டைக்கோசு, வெங்காயம், சுரைக்காய், பாகற்காய், அவரை, பீட்ரூட், பூசனி போன்ற குறுகியகால காய்கனி பயிர் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் காய்கனிகள் 60 சதவீதம் கேரளத்திற்கும், எஞ்சியவை உள்ளூர் சந்தை, மதுரை, திருச்சி சந்தைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தலில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்திற்கு காய்கனிகளை விற்பனைக்கு. அனுப்புவது கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் காய்கனிகளைத் தோட்டத்திற்கே வந்து கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் விவசாயிகள் உள்ளூர் கமிஷன் மண்டிகளுக்குக் காய்கனிகளை நேரடியாகக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

கொள்முதல் விலை குறைவு:

அறுவடை செய்த காய்கனிகளை கமிஷன் மண்டிகளுக்குக் கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு ஏற்ப விலை கிடைப்பதில்லை. கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிலோ ரூ.30-க்கு விற்பனையான தக்காளி, தற்போது கிலோ ரூ.6-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், பங்குனிப் பொங்கல் திருவிழாக்கள் நடைபெறாததால் காய்கனிகள் தேவையும் குறைந்துள்ளது.

மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், காய்கனிகள் செடியிலேயே கருகி வீணாவதைத் தவிர்க்க, கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று விவசாயிகள் கூறினர்.

தட்டுப்பாடு, விலை உயர்வு ஏற்படும் நிலை:

ஊரடங்கு எதிரொலியாக கடும் நஷ்டத்தைச் சந்தித்து வரும் விவசாயிகள், அறுவடை முடிந்த தோட்டங்களில் தொடர்ந்து காய்கனி பயிர் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டவில்லை.

நடப்பு பருவத்தில் விவசாய வருவாய் குறைந்ததால் விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்து மற்றும் வேலையாட்கள் செலவுக்குப் பணப் பற்றாக்குறை ஏற்பட்டும் என்பதாலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் சந்தைப்படுத்தலில் உள்ள சிரமம் கருதியும் காய்கனி சாகுபடியைக் கைவிட்டுள்ளதாகச் சிறு, குறு விவசாயிகள் கூறினர்.

இந்த நிலையில் ஊரடங்கு முடிவடைந்த பின்பு, வரும் ஜூன், ஜூலை மாத திருமண முகூர்த்த நாட்களை முன்னிட்டு காய்கனிகள் தேவை அதிகரிக்கும் போது, உற்பத்தி குறைவால் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மானிய உதவி வழங்க வலியுறுத்தல்:

மாவட்டத்தில் காய்கனிகள் தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகியவற்றைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
தோட்டக்கலைத் துறை மூலம் காய்கனி சாகுபடி பரப்பளவை ஆய்வு செய்து உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கவும், விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மானிய விலையில் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT