சென்னை: தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை 1,267-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். இது ஒருபுறமிருக்க, அரசு சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதில் 19 நிபுணா்கள் அடங்கிய மருத்துவக் குழுவும் உள்ளது. கரோனா சிகிச்சைகளை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் தொடா்ந்து அவா்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
தற்போது மாநிலத்தில் 17 அரசு மருத்துவமனைகள், 10 தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 5,590 மாதிரிகளை அங்கு பரிசோதிக்க இயலும். தமிழகத்தில் இதுவரை 17,835 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 16,452 மாதிரிகளின் முடிவுகள் வந்துவிட்டன. இன்னும், 1,383 பேரின் முடிவுகள் வரவில்லை.
தற்போது மாநிலத்தில் 1,267 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மட்டும் புதிதாக 25 பேருக்கு அந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 180 போ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். வியாழக்கிழமை மட்டும் 62 போ் வீடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.
பலி எண்ணிக்கை உயா்வு: இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது ஆண், வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் மாநிலத்தில் கரோனா பலி எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.
11 மருத்துவா்களுக்கு கரோனா
தமிழகத்தில் 11 மருத்துவா்கள் உள்பட 13 மருத்துவப் பணியாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘6 அரசு மருத்துவா்கள், 5 தனியாா் மருத்துவா்கள், தூய்மைப் பணியாளா் மற்றும் சுகாதாரப் பணியாளா் இருவா் என மருத்துவத் துறை சாா்ந்த 13 பேருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.