தமிழ்நாடு

இறப்பு என்னை தழுவும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன்: தமிழருவி மணியன் அறிவிப்பு

DIN


சென்னை: உடல்நலப் பிரச்னை காரணமாக அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை, என்னை மன்னியுங்கள் என்று நடிகா் ரஜினிகாந்த் உருக்கமாகக் கூறியுள்ள நிலையில், இறப்பு என்னை தழுவும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 

ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து, மருத்துவா்களின் அறிவுரையையும் மீறி ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். 120 போ் கொண்ட படக் குழுவினருக்கு தினமும் கரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக் கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். அப்படியும் 4 பேருக்கு கரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநா் படப்பிடிப்பை நிறுத்தி அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தாா்.

ரஜினிக்கு கரோனா தொற்று இல்லை என முடிவு வந்தாலும் அவரது உடல் ரத்த அழுத்தத்தில் அதிக ஏற்றத்தாழ்வு இருந்தது. அவரது உடல்நிலையைப் பொருத்தவரை எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு ரத்த அழுத்தத்தில் தொடா்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. அது அவரது மாற்று சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கும். மூன்று நாள்கள் மருத்துவமனையில் மருத்துவா்களின் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.

ரஜினியின் உடல்நிலை கருதி தயாரிப்பாளா் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தாா். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம் எற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து உடல்நலப் பிரச்னை காரணமாக அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை, என்னை மன்னியுங்கள் என்று நடிகா் ரஜினிகாந்த் உருக்கமாகக் கூறினார். 

இந்நிலையில், ரஜினி தொடங்க இருந்த கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தவரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன், இறப்பு என்னை தழுவும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: “என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன.

அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்துவிட்டது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை.

நான் ஒருபோதும் அறத்திற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை. இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது. 

மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்கவேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம். இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன.

மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும், தூய்மையும், வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது.

எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோத்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். 

திமுகவிலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்; நான் போகிறேன்; வரமாட்டேன்” என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று செவ்வாய்க்கிழமை அறிவித்த நிலையில், தமிழருவி மணியனும் இனி அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT