ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 4-ஆம் தேதி விசாரிக்கிறது.
கடந்த 2017, பிப்ரவரி 18-இல் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதையடுத்து, 11 எம்எல்ஏ-க்களையும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த விவகாரத்தில் சட்டப் பேரவைத் தலைவரின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம் , மாநில சட்டப் பேரவைத் தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் கூறி அந்த மனுவை 2018, ஏப்ரலில் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான கடந்த விசாரணையின் போது, எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சட்டப் பேரவைத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் போது, அது தொடர்பான கேள்விக்குள் ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன் திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், கடந்த 23-ஆம் தேதி ஆஜராகி, 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பட்டியலிடுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், அண்மையில் மணிப்பூர் மாநில வனத் துறை அமைச்சர் ஷியாம் குமார் தகுதி நீக்கம் தொடர்புடைய வழக்கில், நான்கு வாரத்தில் முடிவு செய்யுமாறு அதன் சட்டப் பேரவைத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை கபில் சிபில் சுட்டிக்காட்டினார். அப்போது, இந்த வழக்கை அவசர விசாரணைக்காக பட்டியிலிடுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் 4-ஆம் தேதி விசாரிக்கிறது.
முன்னதாக, கடந்த ஜனவரி 21-இல் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவில், சட்டப்பேரவைத் தலைவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால், எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் அவரிடம் தொடர வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்றம் மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.