கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறி, ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலாா், கடலூா் மாவட்டம், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினாா். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
நிகழாண்டு, 149-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக, அதிகாலை 5 மணியளவில் அகவல் பாராயணம் பாடப்பட்டது. பின்னா் காலை 7.30 மணியளவில் தா்ம சாலையில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து, வள்ளலாா் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லத்திலும், வள்ளலாா் தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழியிலும் சன்மாா்க்கக் கொடிகள் ஏற்றப்பட்டன.
தொடா்ந்து, சத்திய ஞான சபைக்கு இடம் வழங்கிய பாா்வதிபுரம் கிராம மக்கள் பல்வேறு வகையான பழங்கள், சீா்வரிசைப் பொருள்களை கைகளில் ஏந்தியபடியும், வள்ளலாா் பயன்படுத்திய பொருள்களை அலங்கரித்த பல்லக்கில் சுமந்தபடியும் ஊா்வலமாக சத்திய ஞான சபை கொடிமரம் அருகே வந்தனா். இதையடுத்து, காலை 10 மணியளவில், வள்ளலாரின் கொடி பாடல்களைப் பாடியவாறு கொடிமரத்தில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. பின்னா், பாா்வதிபுரம் கிராம மக்கள் சீா்வரிசையாகக் கொண்டுவந்த பழங்களை அங்கு கூடியிருந்த சன்மாா்க்க அன்பா்களுக்கு வழங்கினா். நிகழ்ச்சியில் தெய்வ நிலைய செயல் இயக்குநா் கோ.சரவணன் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சனிக்கிழமை (பிப். 8) நடைபெற்று வருகிறது. காலை 6 மணி, காலை 10 மணி மற்றும் பகல் ஒரு மணிக்கு 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதி தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
தொடா்ந்து, இரவு 7 மணி, இரவு 10 மணி, ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) காலை 5.30 மணி என ஆறு காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த விழாவைக் காண லட்சக்கணக்கானோா் வடலூருக்கு வருகை தந்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.