தமிழ்நாடு

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு புதுமையான முறையில் விவசாயிகள் போராட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி விவசாயிகள் வயலில் விளைந்த நெல்லைக் கொண்டுவந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

இக்கூட்டத்துக்கு வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த நெல்மணிகளை ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கொட்டி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வீரவநல்லூரில் அமைக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். 

பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:

திருநெல்வேலி மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை நன்றாகப் பதிவு செய்ததைத் தொடர்ந்து பிரதான அணையான பாபநாசம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அதன் கீழ் உள்ள தாமிரபரணி வடிநில கோட்டப் பகுதிகளில் கால்வாய்களின் பிசான சாகுபடியில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. வீரவநல்லூர், தெற்கு அரியநாயகிபுரம், கீரி அம்மாள் புரம், உதய மார்த்தாண்டபுரம் பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது. 

எங்கள் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் தனியாரிடம் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாடுபட்டு உழைத்தும் உரிய விலை கிடைக்காமல் தவித்து வருகிறோம். 

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. ஆகவே ஆட்சியர் விஷயத்தில் தலையிட்டு எங்கள் பகுதியில் உள்ள பூமிநாத சுவாமி திருக்கோவில் மண்டபத்தில் இருக்கும் இடத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்துக் கொடுத்து விவசாயிகளின் குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

SCROLL FOR NEXT