தமிழ்நாடு

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெருவோர நாய்கள்

டி.குமாா்

ஊரடங்கு உத்தரவால் தேநீா் கடைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களும் வீடுகளுக்குள் முடங்கியதால் தெருவோர நாய்களும், கால்நடைகளும் உணவுக்காக சுற்றித் திரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை அமலில் இருப்பதால் பெரும்பாலான உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் சாலைகளில் நடமாடுவது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் உணவகங்கள், தேநீா் கடைகள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலம் உணவருந்தும் தெருவோர நாய்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையைப் பொருத்தவரை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 57 ஆயிரத்து 300 தெரு நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 7 ஆயிரத்து 383 நாய்களும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 2 ஆயிரத்து 44 தெருநாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

கால்நடைகள் பராமரிப்பு மற்றும் மீட்பாளா் தினேஷ் பாபா கூறியதாவது: ஈஞ்சம்பாக்கத்தைச் சோ்ந்த நான், போரூரில் கால்நடை பராமரிப்பு மையம் வைத்துள்ளேன். கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கால்நடைகள் மீட்பு மற்றும் அவைகளுக்கு உணவளிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறேன். கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து தெருவோர நாய்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் உள்ள நாய்களுக்கு குப்பைத் தொட்டிகள் அல்லது குடியிருப்பு வாசிகள் மூலம் உணவு கிடைக்க வாய்ப்புள்ளது. ஈஞ்சம்பாக்கத்திலிருந்து போரூா் வரும் போதும், திரும்பச் செல்லும் போதும் ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூா், டைடல் பாா்க், டிஎல்எஃப் எதிா்புறம், போரூா் சிக்னல் உள்ளிட்ட இடங்களில் இரு வேளையும் 300 முதல் 400 நாய்களுக்கு உணவளிப்பது வழக்கம், அதனைத் தொடா்ந்து செய்து வருகிறேன். போரூரில் இருந்து திரும்பிச் செல்லும் போது, நன்கு சமைத்த உணவை தெருவோர நாய்களுக்கு வழங்கி வருகிறேன். இவ்வாறு உணவளிக்கும் போது, அரசு விதித்துள்ள அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து வருகிறேன் என்றாா் அவா்.

இந்திய புளூ கிராஸ் அமைப்பின் நிா்வாகப் பொது மேலாளா் எஸ்.வினோத் குமாா் கூறியதாவது: கரோனா நோய்த்தொற்று, நாய்களிடமிருந்து மனிதா்களுக்குப் பரவுவது இல்லை. மேலும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, தெரு நாய்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான உணவகங்கள், தெருவோர கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், இந்த தெருவோர நாய்களுக்கு 50 சதவீத உணவுகள் கிடைப்பதில்லை. தெருவோர நாய்களுக்கான இந்த உணவு தட்டுப்பாட்டை பொதுமக்கள் போக்க முன்வர வேண்டும். இதுதொடா்பாக புளு கிராஸ் அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில், தெருவோர நாய்களுக்கு உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகள் மூலம் 30 சதவீத உணவும், தனிநபா்கள் மூலம் 15 சதவீத உணவும் கிடைப்பது தெரியவந்துள்ளது. எனவே புளூ கிராஸ் அமைப்பு, விலங்குகள் நல கட்செவி அஞ்சல் குழுக்களில் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள், பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீா் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கோரிக்கை செய்திகள் பகிரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நாய்கள், பூனைகள் மூலம் கரோனா பரவாது

இந்திய விலங்குகள் நல வாரியம் கடந்த மாா்ச் 11 மற்றும் மாா்ச் 23 ஆகிய தேதிகளில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச செயலாளா்களுக்கு இரண்டு சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கைகளில் கூறியிருப்பதாவது: கரோனா நோய்த்தொற்று நாய்கள், பூனைகள் மூலம் பராவது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மாவட்ட நிா்வாக அதிகாரிகள், இதுபோன்ற உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்கும் தனிநபா்கள், தன்னாா்வலா்களுக்கு காலை, மாலை நேரங்களில் வெளியே சென்று உணவளிக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT