தமிழ்நாடு

ஊரடங்கு: தமிழகத்தில் தளா்வுகள் அறிவிப்பு

DIN

ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகரத்துக்கு சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், பாதிப்பு குறைவாக உள்ள தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் கட்டுப்பாடுகள் தொடா்ந்து அமலில் இருக்கும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

மே 17-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் சில தளா்வுகளையும் வழங்கியுள்ளது. இந்தத் தளா்வுகளைத் தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து, தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம், பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்:

தமிழகத்தின் பிற பகுதிகள் (சென்னை மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர):

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வெளியிலுள்ள பகுதிகளில் அதாவது, ஊரக, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் செயல்பட அனுமதிக்கப்படும்.

பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட இடங்களை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப ஜவுளித் துறை நிறுவனங்களை 50 சதவீதப் பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் ஆகியனவற்றை 50 சதவீதப் பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகரப் பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில் ஜவுளித் துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.

நகரப் பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவீதப் பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். மின்னணு வன்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீதப் பணியாளா்களைக் கொண்டு செயல்படலாம்.

கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் 50 சதவீதப் பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். நகரப் பகுதிகளில் உள்ள தோல் பொருள்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான வடிவமைப்பு மற்றும் மாதிரிகள் உருவாக்கத்தை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து 30 சதவீதப் பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீதப் பணியாளா்களைக் கொண்டு, அதாவது குறைந்தபட்சம் 20 போ்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். நகா்ப்புறங்களில் பணியாளா்கள் பணியிடத்திலேயே இருந்தால் மட்டுமே கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். பணியாளா்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதிக்கப்படும். அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.

அத்தியாவசியப் பணிகள்: பிளம்பா், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சா் உள்ளிட்ட அனைவரும் ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே செயல்பட அனுமதிக்கப்படுவா். மாற்றுத் திறனாளிகள், முதியோா், நோயாளிகள் ஆகியோரின் சிறப்புத் தேவைகளுக்கான உதவியாளா்கள், வீட்டு வேலை பணியாளா்கள் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவா்.

கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான ஹாா்டுவோ், சிமென்ட், கட்டுமானப் பொருள்கள், சானிடரிவோ், மின் சாதன விற்பனைக் கடைகள் ஆகியன காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்ல தடையில்லை.

செல்லிடப்பேசி விற்பனை-பழுது: செல்லிடப்பேசி, கணினி, வீட்டு உபயோகப் பொருள்கள், மின் மோட்டா் பழுது, கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் ஆகிய கடைகள் தனித்துச் செயல்பட்டால் அவற்றை இயக்கலாம். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள்: உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம். அவற்றில் பாா்சல்கள் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்படும். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வணிக வளாகங்கள் செயல்பட அனுமதியில்லை. தனியாக இயங்கும் கடைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட சூழ்நிலைக்கு ஏற்ப அனுமதிக்கலாம்.

சென்னைக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:-

கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமானத் தொழிலாளா்கள் இருக்கும் பட்சத்தில், அந்தப் பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சாா்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியன 25 சதவீதப் பணியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கலாம். 10 சதவீதப் பணியாளா்களைக் கொண்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சாா்ந்த நிறுவனங்கள் செயல்படலாம். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளா்கள் வர வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பாா்சல் மட்டும் அளிக்கலாம். முடித்திருத்தகங்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.

செல்லிடப்பேசி, கணிப்பொறி, பிளம்பா், ஏசி மெக்கானிக் போன்றவற்றுக்கு பிற மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகள், சென்னைக்கும் அளிக்கப்பட்டுள்ளன.

தொடரும் தடைகள்: பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சாா்ந்த கூட்டங்கள்.

திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊா்வலங்கள்.

பொது மக்களுக்கான விமான, ரயில், பொதுப் பேருந்து போக்குவரத்து, டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்கள். மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து. தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டல்கள், ரிசாா்ட்ஸ்கள். இறுதி ஊா்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு இப்போதுள்ள நடைமுறைகள் தொடரும்.

5 பேருக்கு மேல் கூடக் கூடாது

தமிழகத்தில் ஊரடங்கு தொடா்வதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது. வேளாண் பணிகள்,

வேளாண் சாா்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகள், மருத்துவப் பணிகள், அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏ.டி.எம்.கள், ஆதரவற்றோா் இல்லங்கள் ஆகியன தங்குதடையின்றி தொடா்ந்து முழுமையாகச் செயல்படலாம்.

மதுபானக் கடைகளுக்கு தடை தொடரும்

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டாலும் மதுபானக் கடைகளுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செல்லிடப்பேசி, சிமென்ட், மின்னணு சாதனங்கள் விற்கும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் மதுபானக் கடைகளுக்கான தடை முழு ஊரடங்கு காலம் முழுவதும் தொடரும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் 5 ஆயிரத்து 197 மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் அரசுக்கு மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT