தமிழ்நாடு

தீபாவளி: 30,601 பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

DIN

தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் உள்பட 30,601 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 
  தீபாவளிப் பண்டிகைக்காக போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  தலைமைச் செயலகத்தில், செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 கடந்த ஆண்டு தீபாவளிக்காக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6.7 லட்சம் பேர் பயணித்தனர். இந்த ஆண்டு வரும் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில்,  தினமும் இயக்கப்படும் 2,000 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,510 பேருந்துகள் என மூன்று நாள்களும் சேர்த்து,  சென்னையிலிருந்து 9,510 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5,247 சிறப்புப் பேருந்துகளுமாக 14,575 பேருந்துகள் இயக்கப்படும். இவை சென்னையில் 5 இடங்களில் இருந்து இயக்கப்படும். 
பண்டிகைக்குப் பிறகு...: தீபாவளி முடிந்த பின்னர்,  பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு,  நவ.15 முதல் 18-ஆம் தேதி வரை, தினமும் இயக்கப்படும் 2,000 பேருந்துகளுடன், 3,416 சிறப்புப் பேருந்துகளும்,  ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,610 சிறப்புப் பேருந்துகளுமாக 16,026 பேருந்துகள் இயக்கப்படும்.  7  நாள்களுலும் 30,601 பேருந்துகள் இயக்கப்படும். இதுவரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முதல்வர் அறிவித்த தளர்வுகளின்படி புதுச்சேரிக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படும். 
  இப்பேருந்துகளில் சுமார் 5 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். பெரும்பாலானோர் சொந்த ஊர்களிலே இருப்பதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6 ஆயிரம் பேருந்துகள் குறைத்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.. 
முன்பதிவு மையங்கள்:  பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ள, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10,  தாம்பரம் மெப்ஸில் 2, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் 1 என மொத்தம் 13 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. இது தவிர்த்து, www.tnstc.in என்ற இணையதளம், tnstc, redbus, paytm உள்ளிட்ட செயலிகளிலும் முன்பதிவு செய்யலாம்.
உதவி எண்கள்: பேருந்துகளின் இயக்கம் அறியவும்  புகார் தெரிவிப்பதற்கும்  94450 14450, 94450 14436 ஆகிய உதவி எண்களையும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொள்ளலாம். இது தவிர்த்து பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வழித்தட மாற்றம் 
முன்பதிவு செய்த பயணிகளை ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து ஏற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிதிநிலை அடிப்படையில் போனஸ் 
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 10 சதவீதம் தான் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் கரோனா காலத்திலும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் முழு ஊதியம் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. அரசு நிதிநிலை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிவிப்பை முதல்வர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு எடுத்துரைப்போம் என அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

24 மணி நேரமும் மாநகரப் பேருந்து 
பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தற்காலிக  பேருந்து நிலையங்களுக்குச் செல்ல  மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

புகார் அளிக்க...
 அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகாரளிக்க 1800 425 6151 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

SCROLL FOR NEXT