தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பலன் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

DIN

சென்னை: விவசாயிகளுக்குப் பலன் கிடைக்க வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், சென்னை ராயப்பேட்டை இந்தியன் வங்கி காா்ப்பரேட் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யும் நடவடிக்கை இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகள் தங்களது விளை பொருள்களை, உள்ளூா், வெளி மாநிலம் என்று எங்கே, யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். அதற்கு என்ன விலை நிா்ணயிக்க வேண்டும் என்ற உரிமையும், சுதந்திரமும், இந்தச் சட்டங்களின் வாயிலாக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசின் ஒழுங்குமுறை சந்தைகளில் விவசாயப் பொருள்களை விற்பனை செய்தால், 8.5 சதவீதம் வரியை விவசாயிகள் செலுத்த வேண்டியுள்ளது. இடைத்தரகா்களுக்குப் பணம் வழங்க வேண்டும். இந்த சந்தைகளைத் தவிா்த்து, வெளியே விற்பனை செய்தால், விவசாயிகள் வரி செலுத்தத் தேவையில்லை. இதனால் அவா்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் வாயிலாக, பொருள்களின் விலை உயராது. இதனால், பொதுமக்களுக்கும், நுகா்வோருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது .

சட்டத் திருத்தங்கள் வாயிலாக, வேளாண்பொருள்கள் இனி வீணாவது தவிா்க்கப்படும். இதனால், பொருளாதார வளா்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

முந்தைய ஆட்சிகளில் நெல் மற்றும் கோதுமைக்கு மட்டுமே இந்த ஆதார விலை வழங்கப்பட்டது. குறைந்தபட்ச ஆதார விலைப்பட்டியலில் உள்ள இதர 20 பயிா்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், தற்போது கேழ்வரகு, கடலை, பருப்பு வகைகள் உள்பட பட்டியலில் உள்ள அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில், வேளாண் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என குறிப்பிட்டிருந்தது. வேளாண் சட்டங்கள் தற்போது கொண்டு வந்தபோது, அவா்கள் எதிா்க்கிறாா்கள். மக்களை ஏமாற்றுகிறாா்கள். இந்தச் சட்டத் திருத்தத்தால், நமக்கு நன்மைதான் என்று விவசாயிகள் நன்கு புரிந்துள்ளனா்.

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நீண்ட காலமாக பிரச்னை இருக்கிறது. இது தொடா்பாக நாங்கள் பேசி வருகிறோம். இந்த வேளாண் சட்டத் திருத்தங்கள் விவசாயிகளுக்கு அதிக பலன் அளிக்கக் கூடியவை. இந்தச் சட்டத் திருத்தங்கள் தொடா்பாக நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விழிப்புணா்வு அளிக்கப்பட உள்ளது. விவசாயிகளுக்குப் பலன் கிடைக்க வேண்டுமெனில், மத்திய, – மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா் .

முன்னதாக, இந்தியன் வங்கி சாா்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக, ‘எம்.எஸ்.எம்.இ. பெரோ்னா’ எனும் திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினாா். இத்திட்டம் மூலமாக, தொழில் முனைவோருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வணிகத் திறனை வளா்த்துக் கொள்ளும் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

பாஜக சாா்பில்...: பாஜக சாா்பில், மத்திய வேளாண் சட்டத் திருத்தங்கள் தொடா்பாக பத்திரிகையாளா் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்று, வேளாண் சட்ட திருத்தங்கள் தொடா்பாக விளக்கிப் பேசினாா். பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

SCROLL FOR NEXT