தமிழ்நாடு

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு

DIN

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ரூ.110 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று வேளாண்மை துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். இது தொடர்பாக 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்ப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 3 தவணைகளாக விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக மாவட்டந்தோறும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது, இந்தத் திட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் பயன் பெறுவார். இதன் மூலம், விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கே பணம் வரவு வைக்கப்படும்.
 இந்தத் திட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வரை 39 லட்சம் விவசாயிகள் ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றிருந்தனர். இந்தத் திட்டத்தில் பயனாளிகளின் பெயர் விடுபடாமல் இருப்பதற்காக மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது, இதற்கிடையில் கரோனா நிவாரணத்திற்காக மத்திய அரசு பணம் தருவதாகக் கூறி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் கடலுôர், திருவண்ணாமலை, வேலுôர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தனியார் கணினி நிறுவனங்கள், அரசு இணைய சேவை நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் தலா ரூ.500 கமிஷன் பெற்று முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது, வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு: இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்த 2 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 13 மாவட்ட ஆட்சியர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
 ஒழுங்கு நடவடிக்கை: தனியார் கணினி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தங்களுக்குள் கூட்டு ஏற்படுத்திக் கொண்டு இது தொடர்பான ரகசிய குறியீடுகளைத் தெரிந்து கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் கருப்பு ஆடுகளாகச் செயல்பட்ட 34 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 ரூ.32 கோடி பறிமுதல்: மேலும், தற்காலிக அடிப்படையில் பணி செய்து வந்த 80-க்கும் மேற்பட்டோர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பணத்தை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 5 ஆயிரம் வங்கிக் கணக்குகள் மூலம் நடைபெற்ற இந்த முறைகேட்டில் ரூ.32 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது என்று ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
 யாரும் தப்பிக்க முடியாது
 "முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. ஏனெனில் அவர்களின் வங்கிக் கணக்கில்தான் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணம், அவர்களிடமிருந்து கண்டிப்பாக திரும்பப் பெறப்படும். இது தொடர்பாக அதிகாரிகள் அளவிலும் சிபிசிஐடி போலீஸார் மூலமும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்' என்றார் ககன்தீப் சிங் பேடி.
 தருமபுரி மாவட்டத்தில் ரூ. 2.25 கோடி பறிமுதல்
 தருமபுரி, செப். 8: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி வழங்கும் திட்ட முறைகேடு விவகாரத்தில், தருமபுரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 2.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார்.
 தருமபுரியில் அரசு விழா ஒன்றில் ஆட்சியர் சு.மலர்விழி பேசியதாவது: பிரதமரின் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில், தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
 நாமக்கல்லில் ரூ.24.80 லட்சம் பறிமுதல்: நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் போலியாக ஆவணங்களைச் சமர்ப்பித்த 687 பேரிடமிருந்து ரூ. 24 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 89,000 விவசாயிகள் நிதியுதவியைப் பெற்று வருகின்றனர். அவற்றில் சுமார் 1,600 பேரின் வங்கிக் கணக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 687 பேர் போலியாக ஆவணங்களைச் சமர்ப்பித்து நிதியுதவியைப் பெற்றது தெரியவந்தது. அந்தக் கணக்குகளில் இருந்து ரூ.24 லட்சத்து 80 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT