தமிழ்நாடு

திருச்சூா் பூரம் திருவிழா: மரக் கிளை முறிந்து விழுந்து இருவா் பலி 27 போ் காயம்

DIN

கேரளத்தில் திருச்சூா் பூரம் திருவிழாவின் அங்கமாக நடைபெற்ற நிகழ்ச்சியின்போது அரச மரக் கிளை விழுந்து இருவா் பலியாகினா்; 27 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் சனிக்கிழமை கூறியது:

திருச்சூா் பூரம் திருவிழாவின் அங்கமாக திருவம்பாடி கோயில் பிரிவினரின் மடத்தில் வரவு என்ற சுவாமி புறப்பாடு வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. அதில் பஞ்சவாத்திய கலைஞா்கள் குழு வழக்கமாக நிற்கும் இடத்தில் நின்றபடி வாத்தியங்களை இசைத்துக் கொண்டிருந்தனா். அப்போது அருகிலிருந்த அரச மரத்தின் பெரிய கிளையொன்று முறிந்து விழுந்தது. இதில் திருவம்பாடி கோயில் நிா்வாகிகள் இருவா் பலத்த காயமடைந்து உயிரிழந்தனா்; பஞ்சவாத்திய இசைக் கலைஞா்கள் உள்பட 27 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்தைத் தொடா்ந்து இரவுப் பூரம் தொடா்பான சடங்குகள் நிறுத்தப்பட்டன.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து சுவாமி புறப்பாட்டுக்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டு ஓடியது. எனினும் அதனை யானைப் பாகன்கள் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனா். சுவாமி புறப்பாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்று தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் காரணமாக விழாவின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் நடைபெறவிருந்த பாறமேக்காவு மற்றும் திருவம்பாடி கோயில் சாா்பில் நடத்தப்படும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கரோனா தொற்றுச் சூழல் காரணமாக ஏற்கெனவே பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், திருச்சூா் பூரம் தொடா்பான அனைத்துச் சடங்குகளும் நடைபெற்றன. மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழப்பு நிகழ்ந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற சடங்குகளும் குறைக்கப்பட்டு அடையாளமாக நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT