தமிழ்நாடு

வனப்பகுதியில் 9 கி.மீ. நடந்து சென்று மூதாட்டிக்கு உதவிப் பணம் வழங்கும் அஞ்சல் அதிகாரி

மேற்குத் தொடர்ச்சி மலையின் பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள மூதாட்டிக்காக வனப்பகுதியில் 9 கி.மீ. நடந்து சென்று முதியோர் உதவித் தொகை வழங்கி வருகிறார் அஞ்சல் அதிகாரி கிறிஸ்துராஜா. 

கு.அழகியநம்பி

மேற்குத் தொடர்ச்சி மலையின் பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள மூதாட்டிக்காக வனப்பகுதியில் 9 கி.மீ. நடந்து சென்று முதியோர் உதவித் தொகை வழங்கி வருகிறார் அஞ்சல் அதிகாரி கிறிஸ்துராஜா.
 பாபநாசம் மலைப்பகுதியில் பெரிய மயிலாறு, சின்னமயிலாறு, இஞ்சிக்குழி ஆகிய இடங்களில் வசிக்கும் காணி இன மக்கள் கிழங்கு, மிளகு பயிரிடுதல், தேன் எடுத்தல் ஆகிய பாரம்பரியத் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் நகர வாழ்க்கையை விரும்பவில்லை.
 இது குறித்து அறிந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அங்கு சென்று 110 வயதான குட்டியம்மாள் என்ற மூதாட்டியைச் சந்தித்தார். அவருக்கு முதியோர் உதவித் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட்டார். கடந்த 5 மாதங்களாக பாபநாசம் மேலணை கிளை அஞ்சலக அதிகாரி கிறிஸ்துராஜா, உதவித் தொகைக்கான பணவிடையை நேரில் சென்று வழங்கி வருகிறார். பாபநாசம் மேலணையை படகு மூலம் கடந்து அங்கிருந்து சுமார் 9 கி.மீ. வனப்பகுதியில் நடந்து சென்று தொகையை வழங்கி வரும் அஞ்சலக அதிகாரி கிறிஸ்துராஜா கூறியது: நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த வனப்பகுதியில்தான். நான் 1997-ஆம் ஆண்டு மே மாதம் முதல் பாபநாசம் மேலணை கிளை அஞ்சலகத்தில் அதிகாரியாகப் பணி செய்கிறேன்.
 இஞ்சிக்குழிக்கு வந்த ஆட்சியர், அங்கு வசிக்கும் குட்டியம்மாளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார். கடந்த 5 மாதங்களாக அத்தொகையை நேரில் சென்று குட்டியம்மாளிடம் வழங்கி வருகிறேன். பாபநாசம் அணையை வனத்துறை அனுமதியுடன் படகில் கடந்து அங்கிருந்து சுமார் 9 கி.மீ. தூரம் வனப்பகுதியில் ஒற்றையடிப் பாதை வழியாகச் செல்கிறேன். காலை 7 மணிக்கு காலை, மதியம் என இருவேளை உணவை கையிலெடுத்துக் கொண்டு கிளம்புவேன். வழியில் ஆற்றில் குளித்துவிட்டு, காலை உணவை முடித்துக் கொண்டு இஞ்சிக்குழி சென்று பணம் வழங்கிவிட்டு, மீண்டும் மாலை 6 மணிக்கு வந்து சேருவேன்.
 வனப்பகுதியில் யானை, காட்டெருமை உள்ளிட்டவை உண்டு. இதுவரை அவற்றால் எதுவும் தொந்தரவு இல்லை. ஆனால் செல்லும் வழியில் அட்டைகள் உடலில் ஒட்டிக் கொள்ளும். ஒருமுறை சென்று வருவதற்குள் குறைந்தது 10 அட்டைகளாவது உடம்பில் ஒட்டிக் கொள்ளும். பயப்படும்படியாக வேறு எதுவும் கிடையாது. காணி இனத்தில் பிறந்த நான் வனப்பகுதியிலேயே அரசின்அஞ்சல் துறை மூலம் காணி மக்களுக்குச் சேவை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT