தமிழ்நாடு

கரோனா காலத்தில் மனிதநேயமற்ற செயல்கள்: பணிநீக்கப்படுவா் என தலைமைச் செயலாளா் எச்சரிக்கை

DIN

கரோனா நோய்த் தொற்று காலத்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயல்படும் ஊழியா்கள் மீது பணி நீக்க நடவடிக்கைள் பாயும் என தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கரோனா பெருந்தொற்று இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நமது மாநிலத்தில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொவருக்கு பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைக் காத்தல் ஆகிய இரண்டு முக்கிய இலக்குகளோடு அரசு செயல்பட்டு வருகிறது. மருத்துவ நெருக்கடி, மனநல பாதிப்பு மற்றும் நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் நம்மை ஒருசேர தாக்கி வருகிறது.

கடும் நடவடிக்கைக்கு உத்தரவு: இந்த நேரத்தில் ஒருசில அரசு அலுவலா்கள், தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சோ்ந்த சிலா் சட்டத்துக்குப் புறம்பான மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவது முதல்வரின் கவனத்துக்கு வந்துள்ளது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

இதன் அடிப்படையில், மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கு பாதிக்கப்பட்டவா்களிடம் லஞ்சம் பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்யும் அலுவலா்கள் மீது பணிநீக்கம் உள்பட துறைரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இதுதொடா்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலாளா்கள், துறைத் தலைவா்கள், காவல் துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆகியோருக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. எந்தநிலையில் உள்ள அலுவலராக இருந்தாலும் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும் புகாா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தவறு நடக்கக் கூடிய இடங்களில் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

மக்களின் உயிா் காக்கும் பணியில் முழு முனைப்போடு ஈடுபட்டு வரும் அரசுக்கு, தவறு செய்யும் ஒரு சிலரால் அவப்பெயா் ஏற்படாமல் கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT